காதலனுக்காக கணவனை கொல்ல முயன்ற சென்னை பெண்

காதலனுக்காக  கணவனை கொல்ல முயன்ற பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரது காதலனும் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன்-அனிதா தம்பதி திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இருவர் கதிரவனை கடுமையாக தாக்கினர். பின்னர் அனிதாவிடம் இருந்து நகையை பறித்து தப்பிவிட்டனர்.

இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காமிரா மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றது  தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார்,  அனிதாவிடம் தீவிர  விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மென்பொறியாளர் கதிரவனுக்கும், அனிதாவிற்கும் முப்பது நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனால் அனிதா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்துவரும் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். வலுக்கட்டாயமாக கதிரவனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

இதையடுத்து அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் மூலம் கணவரைக் கொல்லத் திட்டம் தீட்டினார்.  சதித்திட்டத்தின் படி, திருவான்மியூர் கடற்கரையோரம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கதிரவனை அழைத்துச்சென்று, அவரது கண்களைக் கட்டிக் கொண்டு அனிதா விளையாடியிருக்கிறார்.

அப்போது அங்கு மறைந்திருந்த அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன், ஆயுதங்கள் மூலம் கதிரவனை கடுமையாக தாக்கினார்.

விசாரணையில் இவை அனைத்தும் தெரியவர, அனிதாவையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதுங்கியிருந்த அந்தோணி ஜெகனையும் காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த கதிரவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கதிரவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஏற்கெனவே கதிரவன் அனிதா தேனிலவு சென்ற போது, மலையில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்றோம். அந்தத் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து நேற்று கதிரவனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்” என்று ஜெகன் தெரிவித்துள்ளார். அவரை மதுரை சென்று கைது செய்த ஆய்வாளர்கள் மகாராஜன், வசந்த ராஜா மற்றும் காவலர்கள் புஷ்பராஜன், செந்தில், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.