காப்பக வன்கொடுமை வழக்கில் பீகார் அரசு மெத்தனம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

டில்லி:

பீகாரில் உள்ள காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத அரசின் மெத்தன போக்குக்கு உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், பிஹாரில் உள்ள 17 காப்பகங்களில் 9 காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தாலும், கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதியப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பீகார் அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையை கடுமையாக சாடியது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 377 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முசாபர்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காப்பக வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான குற்றவாளி ப்ராஜெஷ் தாகூர்

இந்த வழக்கில், பிரதான குற்றவாளியான காப்பக உரிமையாளர் ப்ராஜெஷ் தாகூரை மாநிலத்திலிருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, தாகூர் பஞ்சாபின் பட்டியாலாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.