காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி: குமாரசாமி அலறல்

பெங்களூரு:

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை ஆணையத்தையும்,  காவிரி ஒழுங்காற்று குழுவை யும் மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக மாநில சார்பாக பிரதிநிதிகளை நியமிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்திய நிலையில், கர்நாடக மாநில அரசு அதை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு தானாகவே கர்நாடக சார்பில் பிரதிநிதியை நியமித்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவையும் அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி,  காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

மேலும்,  காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில், மத்திய அரசே  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை நியமித்ததற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.