WWW.TKADA.COM

“மது.. வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்ற வாசகம்  பாட்டில்களில் இருந்தாலும், “இந்த மது இல்லாவிட்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடுதலான கேடு” என்று சட்டசபையிலேயே பயமுறுத்துகிறார் மதுவிலக்குத்துறை அமைச்சர்.

அதோடு, வருடா வருடம் எகிறும் வருமானத்தை பெருமையுடன் ஊற்றுகிறார்.

அது மட்டுமா “திருவள்ளுவர் காலத்திலேயே மது இருந்தது. மது குடித்த அரசனை பெண் கவிஞர் புகழ்ந்து பாடினார்” என்று வரலாற்றில் ஆரம்பித்து, “மதுவிலக்கு இருக்கும் நாடுகளில்கூட மதுவைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று சம கால நிகழ்வுகளுக்கு வருகிறார்.

ஆக, தெருவுக்கு ரெண்டு இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு மூடப்போவதில்லை.

இந்த நிலையில் நாம்தான் சூதானமாக இருக்க வேண்டும். அதாவது குடிக்கும் முறை அறிந்து குடித்து கொஞ்சம் அதிக நாள் வாழ்ந்து தொலைக்கவேண்டும். அப்போதுதான் அரசுக்கு வருமானம் தொடரும் என்தோடு, நம் பிள்ளை குட்டிகளும் பிழைக்கும்.

ஆகவே, நம் தாய்த்தமிழ் உறவுகளஇன் நன்மைக்காக…  குடிப்பது எப்படி என்கிற அறிவியல் பூர்வமான டிப்ஸ் இதோ..!

யாருடன் குடிப்பது?

குடிப்பது என்று முடிவான உடனே  எழும் முதல் கேள்வி, “எவ்வளவு” என்பதுதான். பெரும்பாலும் நண்பர்களுடன் பாருக்குள் நுழைந்து ரவுண்ட் டேபிளில் உட்கார்ந்த பிறகு, “டேய்.. கொஞ்சமா குடிக்கிறோம்.. குவார்ட்டர் வாங்கி பாதி பாதி” என்றுதான் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும்.

ஆனால், பேச்சுவார்த்தை “ழீ.. ழா” என குழந்தை வார்த்தையாகும் வரை குடிப்பது தமிழர் மரபு.

ஆகவே முதல் அதிரடி நடவடிக்கையாக, நண்பர்களுடன் குடிப்பதை தவிருங்கள். “உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட”  என்பது வேறு எதற்கு பொருந்துகிறதோ இல்லையே குடிப்பதில் ரொம்பவே பிக்ஸ் ஆகிவிடும்.

போதும் என்று நீங்கள் நினைக்கும் நேரத்தில், “மச்சி, இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்” என்பான் உத்தமவில்லன்.

ஸோ… நட்பை தவிருங்கள்.  என் வழி, தனி வழி என்பதே சரியான குடிவழியாம்!

எங்கே குடிப்பது?

நட்புக்கும் குடிப்பகத்துக்கும் (பார்) ரொம்ப வித்தியாசமில்லை.. இரண்டுமே ஆபத்தானவை.

ஆமாம்.. தனியாக பாரில் குடித்தாலும் அப்போதும் ஒரு நண்பன், இன்னும் வாங்கு என்பான். அவன் வேறு யாருமல்ல.. கேடுகெட்ட நம்ம மனசாட்சி(!)தான்!

ஆகவே குடித்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறபோது குவார்ட்டப் பாட்டிலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுங்கள்.

இரவு பத்து மணிக்கு மேல், குழந்தைகள் தூங்கியவுடன், மனைவியின் அனுமதியுடன் தனி அறையில் குடியுங்கள்.

பாரில் குடித்து தள்ளாடி வரும்போது பலரதை பார்வையில் படவேண்டி ஆபத்து, வாகனத்தில் விபத்து ஏற்படும் ஆபத்து, அதீத குடி, நண்பர்களினால் செலவு.. எல்லாவற்றையும் தவிர்க்க வீடுபேறு அடையுங்கள்..ஸாரி.. வீட்டில் குடிப்பது போன்ற பேறு வேறில்லை!

எவ்வளவு குடிக்கலாம்?

60 மில்லி குடித்தாலே போதை கிர் என்று ஏறும். இதை உணர்ந்த புண்ணியவான்கள் முன்பு 100 எம்.எல். பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். இப்போது இல்லை.

ஒழியட்டும்.. குவார்ட்டர் பாட்டிலே வாங்குங்கள். அதில் 60 மில்லி மட்டும் குடியுங்கள்.

“என் ரேஞ்சுக்கு இது ரொம்ப குறைச்சலாச்சே” என்று முகம் சுழிக்காதீர்கள். எப்படி குடிப்பது என்பதை அறிந்து குடித்தால், ஒரு பெக்கும் சுகம்தன்னே என்று மலையாள கவிஞர் ஒருவர் அனுபவித்து பாடியிருக்கிறார்.

எப்படி குடிப்பது?

முப்பது மில்லியை மட்டும் கிளாஸில் ஊற்றி, அதில் நிரம்ப தண்ணீர் ஊற்ற வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு “கல்ப்” என்று அடிக்காமல், சிப் சிப்பாக ரசிககு ருசித்து குடியுங்கள். இதனால் குறைவான மதுவையே நீண்ட நேரம் அருந்த நேரிடும். இது, அதிக மதுவை அடித்த திருப்தியை தரும். தவிர, மெல்ல மெல்ல குடிக்கும்போது, அந்த போதையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

என்ன தொட்டுக்கலாம்?

குடி வரும் பின்னே, வறுத்த கோழி வேண்டும் முன்னே என்று பஞ்ச் டயாலாக் பரஞ்சோதியில் இருந்து,  “குவார்ட்டர் சரக்கையும் ஊறுகாகூட இல்லாம அடிப்பேன்” என்கிற கோவிந்தன் வரை வரை எத்தனை வித மனிதர்கள்?

ஆனால் இரண்டுமே தப்பு!

குடியால் கெட்ட வயிறு, எண்ணை பண்டத்தால் மேலும் கெடும். அதே போல சைட் டிஷ் இல்லாமல் அடிப்பது உயிருக்கு முன்னால், உடலுக்கு கூடுதலாக கேடு விளைவித்துவிடும்.

ஆகவே காரட், தக்காளி, வெள்ளரி போன்றவை கொண்ட வெஜிடபிள் சாலட், சாலச் சிறந்தது. கண்டிப்பாக ஊறுகாய் வேண்டாம். அது வயிற்றைக் கெடுக்கும்.

குடிப்பதற்கு ரெடியாவது எப்படி?

இதென்ன சண்டையா… தயாராவதற்கு? என்று சிலர்  நினைக்க்கூடும். உண்மையில் இது சண்டைதான். ஒழுங்காய் இயங்கிக்கொண்டிருக்கும் நம் உறுப்புகளை சிதறடிக்கும் கொடூரமான சண்டை. அதை ரொம்ப விளக்கினால் வருத்தோடே குடிப்பீர்கள். அது நல்லதல்ல.

சரி, விசயத்துக்கு வருவோம்.  குடிப்பதற்கு முன்பு பலர் வெறும் வயிறாக இருக்கவே விரும்புவார்கள். “அப்பத்தான் மப்பு ஏறும்” என்பது இந்த அனுபவ வைத்தியர்களின் கண்டுபிடிப்பு.

இது ஆபத்து. வெறும் வயிற்றில், ஆல்கஹால் இறங்கினால் குடல் வெந்துவிடும். ஆகவே, சிற்றுண்டி சாப்பிட்டு பிறகு குடிக்கலாம்.  அது பிடித்தமானதாக இல்லை என்றால்,  ஒரு பிரட்டில் நன்றாக வெண்ணை தடவி சாப்பிடலாம். இந்த வெண்ணையானது குடல் பகுதியை மூடும். ஆகவே அடுத்து நெருப்பருவியாய் கொட்டும் ஆல்கஹாலி்ல் இருந்து குடல் கொஞ்சம் தப்பிக்கும்.

எத்தனை நாளைக்கு ஒருமுறை..?

ஒரு முறை குடித்த ஆல்கஹாலின் மிச்ச எச்சங்கள் அடுத்த இருபத்தியெட்டு மணி நேரம் நம் உடலில் இருக்குமாம். ஆகவே அதற்குள் மறுபடி குடிக்க ஆரம்பித்து  குடல் குந்தாணிகளை டார்ச்சர் செய்யக்கூடாது. ஆகவே குறைந்தது இரு குடிகளுக்கு இடையே இரண்டு நாட்களாவது இடைவெளி விட வேண்டும்.

குடித்த பிறகு..?

மெல்லிய ஒலியில் பிடித்தமான இசையை கேளுங்கள். மொட்டை மாடியில் அல்லது உங்களது தெருவில் கொஞ்ச நேரம் வாக்கிங் செல்லுங்கள்.

திரும்பி வந்து மனைவியின் கையால் சுவையான உணவை ரசித்து உண்டு, உறங்குங்கள்.

காலையில் நல்ல பிள்ளையாய் கடைக்குச் சென்று பால்பாக்கெட், காய்கறி வாங்கி வாருங்கள். சமையலில் மனைவிக்கு உதவுங்கள். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுங்கள்.

ஒழுங்காய் கிளம்பி வேலைக்கு செல்லுங்கள்!

தாரக மந்திரம்!

குடிக்கும் ஒவ்வெறு முறையும், “இரண்டு (பெக்குக்கு)க்கு மேல் இப்போது வேண்டாம்!”