குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர்: கமல்ஹாசன்

திருவாரூர்:

குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்  குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றும், கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்  கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், திருவாரூரில் நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் திமுக உள்பட அனைத்து கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார்.

அப்போது,  திருவாரூர் பல நல்லவர்களை உருவாக்கியுள்ளது. அதுபோல் கெட்டவர் களையும் உருவாக்கியுள்ளது என்றார். தமிழகத்தில்  வாரிசு அரசியலை உருவாக்கித் தந்ததும் இந்த திருவாருர். எனவே குடும்ப அரசியலை, வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே திருவாரூரில் இந்த கூட்டத்தை நடத்தி இருக்கிறோம் என்று திமுகவை சாடினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போது பல அரசியல் கட்சிகள்  மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக கூறுகிறார்கள். அது மெகா கூட்டணி தானா என்பதை இங்கிருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்  என்றவர், இங்கு வந்திருக்கக் கூடிய மக்கள் கூட்டம் பிரியாணி பொட்டலத்திற்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும் வந்ததல்ல என்று கூறியவர், மக்களைப் பார்த்த்து, காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டோம் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த மாவட்டம் கஜா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு நிதி உதவ பணம் இல்லை என்றவர்கள்,  பொங்கல் பண்டிகைக்கு  1000 ரூபாய் இலவசம் என்கிறார்கள்.  இப்பொழுது எங்கிருந்து பணம் வந்தது. ஆபத்துக்கு உதவாத அந்த பணம் நமக்கு எதற்கு?

இன்றைக்கு 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக சொல்கிறார்கள்.  இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், இத்தனை ஆண்டு களாக அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே வைத்துள்ளது யாருடைய குற்றம் என்று கேள்வி எழுப்பியவர், இதற்கு காரணம், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த இரு கட்சிகளும்தானே… என்றார்.

இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த இரண்டு கட்சிகளையும் கீழே தள்ள வேண்டும் என்பதுதான். அதைத்தான் மக்கள் நீதி மையம் தற்போது முன்னெடுத்து செய்து கொண்டிருக்கிறது.

நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் களமிறங்கி யுள்ளோம் என்ற கமல்,  இந்திய நாட்டின் அரசியலிலும்,  தமிழரின் பங்கு இருக்க வேண்டும். பிரதமர் யார் என்பதை காட்டும் அடையாளமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்காகத்தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளோம் என்று மநீம தனித்து போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவது நல்லதல்ல என்று சிலர் நம் கட்சி மீது திடீர் அக்கறை கொள்கிறார்கள்… ஆனால், நாங்கள் எங்களது கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் யாரோடும் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக குதிரை பேரம் பேச மாட்டோம். கூட்டணி என்பது ஏமாற்று வேலை. நேர்மையான அரசியலை உருவாக்குவதே நம்முடைய கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி