குழந்தைகளுக்கும் ஹெல்மெட்: மசோதா தாக்கல்!

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில்  வாகன சட்ட திருத்த மசோதா தாக்ககல் செய்யப்பட்டது. இதில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்று அங்குள்ள போக்குவரத்து விதிமுறைகள் பற்றி  அறிந்து வந்தார். அமெரிக்கா போல இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

helemt

இதற்காக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய மசோதா பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவில்,  இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அவசியம் என்றும், ஆனால் டர்பன் அணியும் சீக்கியர்களுக்கு கட்டாய ஹெல்மெட் அணியும் விதியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இதே போன்று, காரில் பயணம் செய்வோரில் 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் கட்டாய சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற பரிந்துரையும் இந்த சட்ட திருத்தத்தில் இடம்பெற்றுள்ளது.

விதிகளை மீறுவோருக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே ஹெல்மெட் அணிவதாகவும், இதனை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சி பெறும் போதே ஓட்டுனர்களின் குறைந்தபட்ச கல்வி தகுதி உறுதி செய்யப்பட வேண்டும். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, தவறான பாதையில் செல்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இரண்டாவது முறை இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் 3 மாதம் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வேண்டும். மீண்டும், மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரூ.15,000 வரை அபராதமும், கடுமையான குற்றம் புரியும் ஓட்டுனர்களுக்கு ரூ.10000 அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.