கேரள ஐ எஸ் தீவிரவாதி கொல்லப்பட்டாரா? : வாட்ஸ்அப் தகவல்

--

கோழிக்கோடு

கேரளாவைச் சேர்ந்த ஐ எஸ் ஷாஜிர் மங்களசேரி அப்துல்லா என்னும் தீவிரவாதி ஆஃப்கானிஸ்தானில் நடந்த ராணுவ நடவடிக்கையில் மரணம் அடைந்ததாக புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக தெரிகிறது.

ஷஜீர் ஒரு பொறியியல் பட்டதாரி.  அவர் ஐ எஸ் இயக்கத்தில் சேரும் முன்ப அரபு நாட்டில் பணிபுரிந்து வந்தார்.  பின்பு  இவர் கேரள இளைஞர்களை மனம் மாற்றி ஐ எஸ் இயக்கத்தில் இணைக்கும் பணியை செய்து வந்தார். இதற்காக அவர் டெலிகிராப் தளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் உத்தரவுகளை வழங்கி வந்தார்.  பல ஐ எஸ் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதில் பெரும்பங்கு வகித்து வந்தார்.

கண்ணூரில் சில தீவிரவாதிகளை கைது செய்த போது, அவரைப்பற்றிய மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.  ஆஃப்கன் சென்ற அவரைப் பற்றி பின் தகவல் ஏதும் இல்லை.

காசரகோட் பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் அப்துல் ரகுமான்.  இவருக்கு ஐ எஸ் இயக்கத்தை சேர்ந்த அஷ்ஃபாக் என்னும் இளைஞர் ஷஜீரின் சடலம் எனக்கூறி ஒரு புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார்.   அது உண்மைதானா என்பதை அறிய அவர் ஆஃப்கனிலுள்ள அபூபக்கர் என்பவரை தொடர்பு கொண்டார்.  அபூபக்கர் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அதே புகைப்படத்தை அனுப்பி, ஷஜீரை அல்லா ஏற்றுக் கொள்வாராக என செய்தி அனுப்பினார்.  வேறெதுவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் படவில்லை.

போலீசார், அந்தப் புகைப்படத்தில் சடலத்தின் முகம் தெளிவாக இல்லாததால், அது ஷஜீர் தான் என நிச்சயமாக சொல்லமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.  அதே நேரத்தில் மூன்று மாதம் முன்பு ஷஜீர் ஆஃப்கனில் கொல்லப்பட்டதாக ஒரு ஆதாரபூர்வமற்ற தகவல் கிடைத்ததாகவும் கூறியுள்ளனர்.   ஷஜீரின் முகநூல் கணக்கு மார்ச் மாதம் முதலே ஆக்ட்வ் ஆக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே