கையெழுத்து கூட போட முடியாத நிலையில் விஜயகாந்த்?

d

 

தே.மு.தி.கவின்  சில நிர்வாகிகள், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்த சோதனையான நேரத்தில் அக் கட்சியை இன்னொரு முக்கிய விசயம் கலக்கமடைய வைத்திருக்கிறது.

தங்கள் அன்புத் தலைவர் விஜயகாந்துக்கு என்ன ஆனது என்று கவலையும், பதட்டமுமாக இருக்கிறார்கள் அக் கட்சி தொண்டர்கள்.

கடந்த பல நாட்களாக விஜயகாந்த் வெளியே வரவே இல்லை. தேர்தல் நெருங்கும் நேரம். அதுவும், கட்சிக்குள் கலகம் ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையேயும் தொண்டர்களிடையேயும்  எழுகிறது.

அக் கட்சியின் எம்.எல்.ஏ. சந்திரகுமார்   உட்பட முக்கிய பிரமுகர்கள், கட்சியில் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இன்று தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதற்குக்கூட விஜயகாந்த் வரவில்லை என்கிறார்கள்.

“விஜயகாந்துக்கு என்ன  ஆனது என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்று  பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூட பேசியிருக்கிறார்.

விஷயம் தெரிந்த வட்டாரத்தில் பேசப்படுவது இதுதான்:

” திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு வரை விஜயகாந்துக்கு மதுப்பழக்கம் இருந்தது. அப்பழக்கத்தால் உடலில் பலவித உபாதைகள் ஏற்பட்டன். இதையடுத்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். இங்குதான் நடிகர் ரஜினிகாந்தும் சிகிச்சை பெற்றார்.

அங்கு விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவர் மது அருந்துவதில்லை.

ஆனால் வீரியமான மருந்துகள் கொடுக்கப்பட்டதால்,  தாக்கத்தால், தொடர்ச்சியாக நினைவு வைத்து பேசுவது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

மேலும்,  சில வாரங்களாக அவருக்கு  தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளது.  சைனஸ் தொல்லையும் இருக்கிறது.  ஆகவேதான் பேச வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவர் ஓய்வில் இருக்கிறார்” என்றனர்.

 

ஆக பேசமுடியாத பிரச்சினைதான் என்கிறார்கள் நிர்வாகிகள். ஆனால் இன்னொரு விஷயம் யோசிக்கவைக்கிறது.

கட்சி அறிக்கைகளில் விஜயகாந்த், தானே கையெழுத்திடுவதே வழக்கம். கடந்த மார்ச் 23ம் தேதி மக்கள் நலக்கூட்டணியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் அவரே கையெழுத்திட்டிருக்கிறார்.  (படம்: அ)

 

அ

 

 

ஆ.
ஆ.
இ.
இ.

 

ஆனால், நேற்று (ஏப்ரல் 5) சந்திரகுமார் உட்பட சில நிர்வாகிகளை நீக்கும் அறிக்கையில் அவரது கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்துதான் இருக்கிறது. (படம்: இ)

பேசமுடியாததுதான் பிரச்சினை என்றால், கையெழுத்திடுவதில் என்ன சிக்கல்? இது, “ஒருவேளை கையெழுத்துகூட போட முடியாத அளவுக்கு விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறாரா” என்ற  ஐயத்தை ஏற்படுத்தி வருகிறது.

விஜயகாந்த் மீது அபிமானம் கொண்ட ரசிகர்கள், தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். பிரதான கட்சியின் தலைவர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். வருங்கால முதல்வர் முன்னிறுத்தப்படுபவர்.

இப்படிப்பட்டவரின் உடல் நிலை பற்றி ஐயங்கள் ஏற்படுவதை தடுத்து விளக்கம் கொடுக்க வேண்டியது தே.மு.தி.கவின் கடமை. அதுதான் மக்களாட்சிக்கு அடையாளம்.

 

தே.மு.தி.க.  இதை செய்யுமா?