சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: இருவர் கைது

நெல்லையில் உரிமம் முடிவுற்ற நிலையில், 1 மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய பட்டாசு ஆலை ஒன்றை கண்டறிந்து சீல் வைத்ததோடு, இருவரை காவல்துறையினர் கைதும் செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே செல்லப்பட்டியில் இருந்து வரகனூர் செல்லும் சாலையில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம், அவரது மனைவி அனுராதா, மகன் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை கடந்த ஓராண்டுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூரார்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் காளிராஜ் மற்றும் அவரது நண்பர் பெருமாள்சாமி ஆகியோர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தனர். இந்த ஆலையை நடத்துவதற்கான உரிமம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே முடிந்து விட்ட நிலையில், அதன் பிறகும் சட்ட விரோதமாக அங்கு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இன்று மாலையில் திருவேங்கடம் துணை தாசில்தார் புஷ்பாராணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி ராஜேந்திரன், திருவேங்கடம் எஸ்.ஐ அய்யனார், தனிப்பிரிவு காவலர் வேல்முருகன், வரகனூர் வி.ஏ.ஓ செல்லமுருகன் ஆகியோர் இந்த ஆலையில் திடீர் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது, ஆலை நடத்துவதற்கான உரிமம் முடிந்து 1 மாதம் ஆன பின்னரும், ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி அங்கு தயாரிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியதோடு, பட்டாசு ஆலைக்கும் சீல் வைத்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக திருவேங்கடம் துணை தாசில்தார் புஷ்பாராணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்துள்ள திருவேங்கடம் காவல்துறையினர், அனுமதியின்றி பட்டாசு தயாரித்த காளிராஜையும், பெருமாள்சாமியையும் கைது செய்ததோடு, பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை ஆட்டோவில் ஏற்றி குடோனுக்கு பாதுகாப்பாக அனுப்பியும் வைத்தனர்.