IMG_20160113_015003
மது, வெள்ளம் ஆகியவற்றால் ஆளும் அ.தி.மு.க. மீது  மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது போல தோன்றுகிறதே!
ஆளும் அ.தி.மு.க. மீது மக்கள் பெரும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள்.  தலைநகரின் வெள்ளமும், தளபதியின் பயணமும், ஆளும் கட்சியின் சாயத்தை வெளுக்க வைத்துவிட்டன.
ஆகவே ஜெயலலிதா மனதில் இருப்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அதாவது,  வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அதாவது மக்களை ஏமாற்ற முயற்சி  செய்கிறார்.  அல்லது  உண்மையிலேயே அப்படி நினைக்கிறார்.அப்படியானால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
அந்த அம்மாவிடம் உளவுத்துறை இருக்கிறது. ஆகவே, நிச்சயம் உண்மை நிலை தெரிந்திருக்கும்.   உள்ளூர ஒரு தயக்கமும், சலனமும்  அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால்தான், யாரோடும் கூட்டணி இல்லை என்றவர், இப்போது தேர்தல் நெருக்கத்தில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம் என்கிறார்.  ஆக,  தோல்வி தன்னை நெருங்குகிறது என்பதை அவர் உணர்ந்திருப்பதாகவே நினைக்கிறேன்.
அதிமுக ஆட்சி குறித்து உங்கள் கருத்தை சுருக்கமாக சொல்லுங்களேன்..
ஸ்டிக்கரில் துவங்கி ஸ்டிக்கரில் முடிகிறது அ.தி.மு.க. ஆட்சி.! அதாவது,  இவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, சமச்சீர் கல்விக்கான புத்தகத்தில் வள்ளுவர் படத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இப்போது வெள்ள நிவாரண பொருட்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
இன்னொன்றும் சொல்கிறேன். வரும்  தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்தால் அவரது அரசியல்வாழ்க்கை முடிவடைகிறது. தப்பித்தவறி வெற்றி அடந்தால் தமிழகத்தின் எதிர்காலம் முடிவடைகிறது.
(சற்று இடைவெளிவிட்டு..) ஆனால் நிச்சயமாக தமிழகத்தின் எதிர்காலம் முடிவடையாது!
12546274_10153379071593581_83125121_o (1)
சமூக வலைதளங்களில் திமுக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்டாலின் நடைபயணம் குறித்து நிறைய கிண்டல்கள். இதை எப்படிப்பார்க்கிறீர்கள்?
சமூகவலைதளங்கள் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றன. எல்லோரும் பத்திரிகையாளாரைப்போல எழுத முடிகிறது. கருத்து சொல்ல முடிகிறது. நாம் அறியவேண்டிய சில தகவல்களும் அதில் வருகின்றன.
அதே நேரம், நாம் கவனத்துடன் கையாள வேண்டியதும் அவசியம். ஏனென்றால், நாம் மணலில் எழுதிக்கொண்டிருந்த போது அவாள் சிலேட்டில் எழுதினாள். நாம் சிலேட்டில் எழுதியபோது அவாள் பென்சில்… நாம் பென்சிலுக்கு போகும்போது அவாள் பேனா… நாம் பேனாவுக்கு போகும்போது அவாள் கம்ப்யூட்டருக்கு போய்விட்டாள்.
இதிலிருந்தே  புரிந்துகொள்ள முடியும்.. சமூகவலைதளங்களில் யார் அதிகம் இருக்கிறார்கள் என்று. அவாள்  தி.மு.கவையும், கலைஞரையும் கடும் எதிரிகளாக நினைப்பவர்கள்.  நம் மீது அப்படி ஓர் வெறுப்பு.  ஆகவே அங்கே தி.மு.க. எதிர்ப்பு அதிகமாக இருப்பதில் வியப்பில்லை.
தவிர ஒருவரே  பத்து ஐடியில் எழுத முடியும். அது ஒரு நிழல் யுத்தம்.  அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
அது மட்டுமல்ல… ஸ்டாலின் பயணம் ஒரு புது முயற்சி.  அப்படிப்பட்ட புது முயற்சிகள்.. எப்போதும்  இருவித கருத்துக்களை உருவாக்கவே செய்யும்.
ஆனால் சில விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தானே இருக்கின்றன. உதாரணமாக குடியின் தீமையை விளக்க கல்லூரி மாணவி, ஸ்டாலின் முன் மது பாட்டிலை நீட்டுகிறார்.. இது நாடகத்தன்மையுடன்தானே இருக்கிறது.. ?
புனைவுகளே இல்லாமல் எல்லாம் இருந்துவிடும் என்று சொல்ல முடியாது.  ஆனால் இது பெரிய அளவில் மக்களை ஈர்த்திருக்கிறது என்பதும் உண்மை. 
12544768_10153379071583581_17715562_o (1)
மக்கள் நலக்கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?
மக்கள் நலக்கூட்டணி என்பது வாக்குகளை பிரிக்கும் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்யப்போவதில்லை.  அதுவும் பெரிய அளவில் அவர்களால் வாக்குகளை பிரிக்க முடியாது. . நான்கு  கட்சிகளும் சேர்ந்து ஐந்து சதவிகித வாக்குளை பெறுவார்களா என்பதே சந்தேகம்தான். 
தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நம்புவதாக அந்த கூட்டணியின் தோழர் ஒருவர் சொன்னபோது  புன்னகையோடு வாழ்த்துகளை சொன்னேன்.  வேறென்ன சொல்வது? (சிரிக்கிறார்.)
அந்த கூட்டணியில் இப்போது “முதல்வர்” பிரச்சினை வேறு தலைதூக்கியிருக்கிறது. சிபிஐ கட்சிக்காரர்கள், நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் தலித்தான் முதல்வர் ஆக வேண்டு் என்று விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார் கூறுகிறார். இடையில் வைகோ வேறு,  தானே முதல்வர் வேட்பாளராக போட்டியிடப்போகிறேன் என்கிறார். இதுவே  அவர்களுக்கு பாதகம்தான்.
இப்போதே முதல்வர் வேட்பாளருக்கான சண்டை துவங்கிவிட்டது என்கிற தோற்றம் மக்களிடையே ஏற்படுவது அந்த கூட்டணிக்கு நல்லதல்ல.
சரி, பல கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து எனது கருத்து ஒன்றே ஒன்றுதான். தமிழகத்தில் முதல்வர் ஆவது மிக மிக கடினம்.முதல்வர் வேட்பாளர் ஆவது மிக மிக எளிது.
திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை அரசு நடத்தும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததற்கு சீமான் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறாரே..!
இத்தனை நாள் இல்லாமல் திடீரென இப்படி ஜெயலலிதா அறிவித்திருப்பதற்குக் காரணம் தேர்தல் கணக்குதான்.
திருமலை நாயக்கர் மீது எனக்கு எதிர்க்கருத்து உண்டு. பல்லவர் காலத்தில் துவங்கி சோழர் காலத்தில் கொடிகட்டி பறந்த பார்ப்பன ஆதிக்கம் நாயக்கர் காலத்தில் நிலைபெற்றது.  நாயக்கர் ஆட்சியில் தளபதியாக இருந்து, பிறகு அவர்களையே எதிர்த்த மதுரை வீரனே சரி என்பவன் நான்.  ஆனால் புகழ் பெற்ற மன்னராக இருந்திருக்கிறார் திருமலை நாயக்கர். அவருக்கு  அரசு விழா எடுப்பதில் தவறொன்றும் இல்லை.
பேட்டி: டி.வி.எஸ். சோமு படங்கள்: கல்யாண்