ananthavikadannews_29119509459

னது டென்ஷனை குறைக்க, மனைவி பிரேமலதாவின் வற்புறுத்தலின் போரில், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா ஆசிரமத்தில் ஒருவாரம் தங்கி யோகா பயிற்சி முடித்தார் கேப்டன் விஜயகாந்த்.

நேற்றுதான் பயிற்சி முடிந்து வந்தார். இன்று தனது எம்.எல்.ஏ. மற்றும் வாகன ஓட்டுனரை அடி பிய்த்து எடுத்துவிட்டார்.

“அப்படி என்னதான் ஒருவாரம் ஆசிரமத்திலேயே தங்கி கற்றுக்கொண்டாரோ…” என்று அவரது கட்சிக்காரர்கள் விரக்தியில் பேசிக்கொள்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி மக்கள் முன்னால் கட்சிக்காரர்களை துவைத்து எடுத்தால் மக்கள் மதிப்பார்களா என்கிற பயம் அவர்களுக்கு.

ஆனால் விவரம் தெரிந்தவர்களின் பயம் வேறு.

ஒருவாரம் விஜயகாந்த் தங்கியிருந்த வெள்ளியங்கிரி ஈசா ஆசிரமத்தின் மீதும் அதன் தலைவர் ஜக்கி வாசுதேவ் மீதும் பலவித குற்றச்சாட்டுகள் உள்ளன.

அங்கு போய் இவர் தங்கிவந்து, அவங்க சொல்லிக்காடுத்த யோகாவால மனசும் உடம்பும் புத்துணர்ச்சி ஆயிடுச்சி என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுத்திருக்கிறாரே என்பதுதான் விவரமானவர்களின் வருத்தம்.

 

yoga

அப்படி என்ன புகார் இருக்கிறது ஈசா ஆசிரமத்தின் மீது..

கோயம்புத்தூரை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது, ஈஷா மையம். இதன் அதிபர், ஜக்கிவாசுதேவ். இவருக்கு, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

”வனத்துறையின் அனுமதி இல்லாமல், காட்டுப்பகுதியில் பல கட்டுமானப் பணிகள் ஈஷா மையம் மேற்கொண்டு வருகிறது. யானைகளின் வழித்தடங்களை அடைத்து, புதியக் கட்டடங்களை கட்டுகிறது. இப்படி அத்துமீறல்கள் செய்து வன உயிரினங்களுக்குக் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது ஈஷா மையம். அதனால், அந்த மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

சட்டம் அறிந்தவர்கள், “வனப்பகுதியில், முறையான அனுமதி இல்லாமல் குடிசை கூட போட முடியாது. ஆனால், எந்த அனுமதியும் இல்லாமல் ஈஷா நிறுவனம் பல பெரும் கட்டடங்களைக் எழுப்பியுள்ளது. தடையில்லாச் சான்றிதழ் கேட்டு ஈஷா நிறுவனம் ‘மலைதளப் பாதுகாப்புக் குழு’வின் அனுமதி பெற்றே அங்கு கட்டிடம் எழுப்ப வேண்டும். ஆனால் அதற்கு மனுவைக் கொடுத்துவிட்டு, மனு பரிசீலனையில் இருக்கும்போதே, அதைத் திரும்பப் பெற்றது ஈஷா மையம்.

இந்த மையம், யானைகளின் வழித்தடங்களை மறித்து, சோலார் மின் வேலிகளை அமைத்திருக்கிறது. இதைக் கடக்கும் யானைகள் மின்சாரத்தால் தாக்கப்பட்டு மிரண்டு ஓடுகின்றன. அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

தவிர கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை, ‘புதியக் கட்டடங்கள் கட்ட தடையில்லாச் சான்று வழங்கமுடியாது’ என ஈஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆகவே, ‘வனத்துறை அனுமதி இன்றி ஈஷா மையம், கட்டியுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். யானைகளின் வழித்தடங்களை மறித்து, அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

இந்த ஈஷா மையத்தின் மீது, “தியானம், யோகா சொல்லித்தருவதாக கூறி பெரும் பணத்தை பிடுங்கி ஏமாற்றிவிட்டார்கள்” என்று வெளிநாட்டு பெண் புகார் கொடுத்ததும் உண்டு.

இதே மையம், சேலம் நகரத்தில் மரம் நடுவதாகச் சொல்லி ஏமாற்றியதாகவும் புகார் இருக்கிறது.

“ஏற்கெனவே, பல கட்சி பிரமுகர்களையும் அழைத்து வளைத்துவிட்டது ஈசா யோகா மையம்.   ஆனால் விஜயகாந்தோ, “எதுவும் சட்டப்படி நடக்க வேண்டும்” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுபவர். ஈஷா யோகா மையம் பற்றி விசாரிக்காமல் அவர் அங்கு தங்கலாமா… அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கலாமா. இவரும் அங்கே சிக்கிவிட்டாரே..” என்று ஆதங்கப்படுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.