சர்தார் படேல் சிலை: மோடி திறக்க பழங்குடியினர் எதிர்ப்பு

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி திறந்துவைக்க அப்பகுதி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அன்று தங்கள்  வீட்டில் உணவு சமைக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

பல்வேறு மாகாணங்களாக (தனி அரசுகளாக  இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க, அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். 2013-ம் வருடம் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.  182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை வைக்க திட்டமிடப்பட்டது.  இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

சிலை  அமைக்கப்படும் வளாகத்தில் பெரிய பூங்கா, உணவகம்,  மாநாடு மையம்,   ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம்  ஆகியவற்றை உருவாக்க திட்டமிடப்பட்டது.

உலகிலேயே உயரமான சிலையாக  ரூ.3,000 கோடி ஒதுக்கீட்டில் சிலை உருவானது.

தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலை அமைந்துள்ள நர்மதை நதிக்கரைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

“எங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக அரசால் கூறப்பட்டது. ஆனால் எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படவில்லை. ஆகவே மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கத்தினமாக கடைபிடிப்போம். அன்று வீட்டில் உணவு சமைக்கமாட்டோம்” என்று  என அப்பகுதியில் உள்ள 72 ஊர்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.