சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ஆதாரத்திற்கு பொறுப்பேற்குமா மத்திய அரசு?

ஹைதெராபாத்:

மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை.

நல்சார் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஃபைசான் முஸ்தபா

பொதுவாகவே கிரிமினல் வழக்குகளின் விசாரணையின் போது சாட்சிகள் மிரட்டப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்கப்படுவதும் வழக்கம். அதனால்தான் பெரும்பாலான வழக்குகள் பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, நல்சார் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஃபைசான் முஸ்தபா, கூறுகையில், பிறழ் சாட்சிகளின் எண்ணிக்கையாலும், குற்றம் சரியாக நிரூபிக்கப் படாததாலும் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர், அல்லது வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றார்.

குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர்களுக்கு எந்த விதமான வசதியோ அல்லது ஆதாயமோ செய்து தரப்படுவது கிடையாது. அதற்கு மாறாக, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும்போது குற்றம் சட்டப்பட்டிருப்பவர் மற்றும் காவல் துறையினர் தரப்பிலிருந்தும் துன்புறுத்தல்களையும் இடையூறுகளையும் எதிர்கொள்வதுதான் மிச்சம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான சாட்சிகள் இந்து பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுபவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் விரோதப் போக்கைக் காட்டியுள்ளனர்.

சோராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு வரும் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் 210 சாட்சிகளில், கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 92 சாட்சிகள் விரோதமாக மாறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட Lt-Col புரோஹித், 2007-ம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் விரோதமாகத் திரும்பினார். ஜார்கண்டில் தற்போது விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் ரந்திர் சிங் உட்பட 40-க்கும் மேற்பட்ட சாட்சிகள், விரோதமாக மாறியதால், 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில், 19 சாட்சிகள் விரோதமாக மாறியதன் விளைவாக சுவாமி அசிமானந்த் விடுதலை செய்யப்பட்டார்.

இதே போல் இன்னும் பல வழக்குகளில் சாட்சிகள் எதிராக மாறியதால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்திய சட்டக் கமிஷனின் 14வது அறிக்கையானது 1958-ல் சாட்சி பாதுகாப்பைப் பற்றி பேசியது. 154 மற்றும் 178வது அறிக்கைகள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்தன. நீதிபதி வி.எஸ். மாலிமத் கமிட்டி (2003) சாட்சி பாதுகாப்புத் திட்டத்தின் தேவையை சுட்டிக்காட்டியது. 2006-ம் ஆண்டில், சட்ட ஆணையம், அதன் 198 வது அறிக்கையில், இந்த விவகாரத்தை மீண்டும் விவாதித்தது.

பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்சி பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிக்கையிடுமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பெஸ்ட் பேக்கரி வழக்கில் சாஹிரா உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் விரோதமாக மாறியதால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பெரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, 2003-ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி வாஜ்பாய் அரசாங்கத்தால் சாட்சிகள் பாதுகாப்பிற்கான வரைவு மசோதா கையெழுத்திடப்பட்டது.

சமீபத்தில், மத்திய அரசின் சாட்சிகளின் பாதுகாப்புத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் அதற்கான சட்டம் கொண்டு வரப்படும் வரை அத்திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை தொடங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டத்தில் உள்ளது போல் சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, மத்திய அரசு வரைவு திட்டம் உருவாக்கி, மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டது. அந்த வரைவு மசோதாவிற்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, இந்த திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக தெரிவித்தது.

விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட நபரும்-சாட்சியும் நேருக்கு நேர் சந்திக்காமலிருப்பதை உறுதிப்படுத்தும் அம்சமும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. மேலும், புதிய திட்டத்தின் கீழ் சாட்சிகளுக்கு ஒரு புதிய பெயர், அடையாளம், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம்.

புதிய திட்டத்தின் சிக்கல்கள்

எனினும், குற்றவியல் நீதி அரசு சார்ந்ததாக இருந்தாலும், பல மாநிலங்களுக்கு போதுமான ஆதாரங்களோ வளங்களோ இல்லை என்று ஃபைசான் முஸ்தபா கூறியுள்ளார். திட்டத்தின் உண்மையான பிரச்சனை, மத்திய அரசு சாட்சி பாதுகாப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், அத்திட்டத்திற்கு என நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை என்பதுதான்.

2006-ன் சட்ட ஆணைய பரிந்துரைப்படி, இதுபோன்ற பிரச்னைகளின் செலவுகளை மத்திய-மாநில அரசுகள் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இப்புதிய திட்டத்தின் கீழ், சாட்சிக்கு மூன்று மாதங்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய வழக்குகளில், அந்த மாவட்டத்தின் உயர் பதவி வகிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு அச்சுறுத்தல் பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதால், சாட்சிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து பேசாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த விவகாரத்தில் மோடி அரசாங்கம் உண்மையாகவே தீவிரமாக இருந்தால், சாட்சிகளின் பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும், என்று ஃபைசான் முஸ்தபா கூறினார்.