’சாதனை நாயகி’ எஸ்.ஜானகி என்னும் கான சரஸ்வதி.. பகுதி 2:

’ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்த கும்மி கொட்டுங்களேன்..’

========================================================

எஸ்.ஜானகி என்ற பெயரிலும், தோற்றத்திலும் ஒரு கம்பீரம் இருந்தாலும் அவர் பாடும் குரல், பேசும் குரல் முழுவதும் இனிமையும் பாசமும் நிறைந்திருக்கும். பாசாங்கு பசப்பு என்பதெல்லாம் அவர் பேச்சில் கிடையாது. மனதில் உள்ளதை உள்ளபடியே பேசுவார்.
விருதுகள் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்க 1992ம் ஆண்டு தேவர் மகன் படத்தில் பாடிய, ’இஞ்சி இடுப்பழகி..’ பாடலுக்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தபோது, அவர் அளித்த பேட்டியில், ’இதே ஆண்டில் ’ரோஜா’ படத்தில், ‘சின்ன சின்ன ஆசை..’ பாடல் பாடிய பாடகி மின்மினிக்கு இந்த விருது கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் ’ என அவர் கூறியபோது அவரது பெருந்தன்மையை அனைவரும் பாராட்டினர்.
எஸ்.ஜானகி என்ற இந்த இசைக் குயில் ஒரே ஆண்டில் 6 மொழிகளில் 100 பாடல்கள் பாடியவர். அதுவும் இந்தி மொழியில் தென்னிந்திய பாடகிகளிலேயே அதிக பாடல்கள் பாடியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய பெருமையும் ஜானகிக்கு உண்டு. அவர் பெருமைகள் ஒரு எல்லைக்குள் அடங்கிவிடாது. மீண்டும் அவரது பாடல் பயணத்தை தொடரலாம்..
முதல் பகுதியில் பார்த்த ’தர்மயுத்தம்’ படத்திற்கு இளையராஜா இசையில் அவர் பாடிய ’ஆகாய கங்கை பூந்தேன்..’ என்ற பாடலை இப்போது கேட்டாலும் மனம் இனம்புரியாத ஒரு இன்பத்தில் லயித்துத்தான் போகும். அத்துடன் சேர்ந்து ஒலிக்கும் ராஜாவின் இசை மனதுக்குள் ஊடுருவும்.
1980ம் ஆண்டு இளையராஜா இசையில் மலேசிய வாசுதேவனுடன் இணைந்து ’மூடுபனி’ படத்திற்காக ’பருவகாலங்களின் கனவு நெஞ்சில்..’ என்ற பாடலைப் பாடினார். அதே ஆண்டு ’ஜானி’ படத்தில் மீண்டும் ராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய, ’காற்றில் எந்தன் கீதம்..’ பாடலைப்பாடி அடுத்த பல வருடங்களுக்கான பாடலை பதிவு செய்தார். 1981ம் ஆண்டு ’கிளிஞ்சல்கள்’ படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசை அமைத்த, ’விழிகள் மேடையாம்’ பாடலை டாக்டர் கல்யாண் உடன் இணைந்து பாடினார். இந்த அலை என்றைக்கும் ஓயாது என்பதுபோல் மற்றொரு கானம் காற்றைக் கிழித்துக்கொண்டு 1981ம் ஆண்டுவந்தது.

16 வயதினிலே, கிழக்கேபோகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் என பாரதிராஜா, இளையராஜா இசையில் அடுத்து படங்கள் வெற்றி பெற்றநிலையில் ஒரு படம் சறுக்கி யது. உடனே இவர்கள் இருவரின் அலையும் ஒய்ந்துவிட்டது என்று திரையுலகில் அரசல் புரசலாக பேசத் தொடங்கினார். இது இரண்டு ராஜாக்களின் காதிலும் விழுந்தது. கடலில் அலை ஒய்வதில்லை என்பதுபோல் எங்கள் கூட்டணியும் ஓயாது என நிரூபிக்க முடிவு செய்தனர். புதிய களம் அமைக்கப்பட்டது. அலைகள் ஒய்வதில்லை என்று படத்துக்கு டைட்டில் முடிவானது. கார்த்திக், ராதா என்ற இளசுகளை ஜோடி சேர்த்தனர். கதைக் கருவும் சாதி பாகுபாடுக்கு சவுக்கடி கொடுக்கும் வலுவான களம். கிளைமாக்ஸில் ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு படத்தின் ஆரம்பம் முதல் ஜாலியான பசங்க விளையாட் டாக காட்சிகள் அமைத்து அதில் ஒரு காதலை மொட்டுவிட வைத்து அதை வேறருக்க தியாகராஜன் என்ற நடிகரை வில்லனாக களம் இறக்கினர். அஸ்திவாரம் பலமாக அமைக்கப் பட்டபோதே வெற்றியின் வீச்செ என்ன வென்று தெரிந்தது. இத்தனை ஏற்பாடு களுடன் இயற்கையின் ஆணிவேரை எழுது கோலாக கொண்ட வைரமுத்து உள்ளே வந்தார். இசையும் பாடலையும் காற்றோடு காறாக கலக்கச் செய்ய எஸ்.ஜானகி என்ற கான சரஸ்வதியும் இந்த கூட்டணியில் கைசேர்த்தார்.

1981ம் ஆண்டு ’அலைகள் ஓய்வதில்லை’ திரைக்கு வந்து ஒரு பெரிய வரலாறு படைத்தது. அதில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட். குறிப்பாக எஸ்.ஜானகி எஸ்..பி.பியுடன் இணைந்து பாடிய , ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ சூப்பர் ஹிட்டா னது. இந்த கூட்டணியின் அலை ஓயாது என்று நிரூபிக்கப்பட்டது. பாரதிராஜாவுக்கும், இளையாராஜவுக்கும் மட்டுமல்ல தமிழ் படத்திற்கு மற்றொரு விடியலாக இப்படம் அமைந்தது. இப்பாடலை தமிழில் தேன் குழைத்து எழுதி இருந்தார் வைரமுத்து.
1982ல் ’காதல் ஓவியம்’ படத்தில், ’நாதம் என் ஜீவனே’ என்று பாடியபோது இசை மீதான ஜானகியின் அழுத்தம் பாடலின் ஒவ்வொரு வரியிலும் எதிரொலித்தது. இந்த பாடலுக்கு வைரமுத்துவும் இளையராஜாவுமே சொந்தக் காரர்கள் .
1982ல் மீண்டும், ’பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய, ’மணியோசைகேட்டு எழுந்து ..’பாடல் அப்படத்தின் வெற்றிக்கு வித்திட்ட பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருந்தார்.
1983ம் ஆண்டு தொடக்கம் இளையராஜாவின் ராஜாங்கம் உச்சத்தில் இருந்தது. ’ஆனந்த கும்மி’ படத்தில், ’ஒரு கிளி உருகுது..’ என்ற பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் இணைந்து பாடினார் ஜானகி. மீண்டும் அதே ஆண்டு திரை இசைப் பாடலில் ஒரு புயலை கிளப்பி விட்டார் ஜானகி.


கமல்ஹாசன் , ஸ்ரீதேவி நடித்த ’மூன்றாம் பிறை’ படத்தில் ஒரு கிக்கேற்றும் பாடல் 80ல் அரங்கேறி அடுத்த பல ஆண்டுகளுக்கு எந்த ஊருக்கு போனாலும் இப்பாடல் எங்கோ ஒரு தூரத்திலிருந்தாவது நம் செவிக்குள் காற்றின் அலையில் வந்து பாயும். கமல்ஹாசன், சில்க் ஸ்மிதா நடனத்தில் கண்ணுக்கு விருந்தளித்த ’பொன்மேனி உருகுதே’ என்ற அந்தப் பாடல் பின்னிப்பெட லெடுத்தது. இதற்கும் ராஜா தான் இசை. ’இன்று நீ நாளை நான்’ படத்தில் ராஜா இசையில், ’மொட்டு விட்ட முல்லைக் கொடி’ பாடலை எஸ்பி. சைலஜாவுடன் இணைந்து பாடினார்.
1985ம் ஆண்டு புதிய பாணியில் ஒரு கிராமத்து கதையுடன் ஹீரோவாகவும் இயக்கு னராகவும் களமிறங்கினார் ஆர்.பாண்டிய ராஜன் அவரது படத்தில், ’என்னைப் பாடச் சொல்லாதே..’ என்று வாலி எழுத ராஜா இசையில் பாடி கலகலன்னு சிரிக்க வைத்த ஜானகி, அதே ஆண்டில் ’இதயகோவில்’ படத்தில் ராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ர மணியத்துடன் இணைந்து ’வானுயர்ந்த சோலையிலே..’ பாடலை பாடி மனதை உருக வைத்தார்.
1985ல் வெளியான ’குங்கும சிமிழ்’ படத்தில் எஸ்.பி.பியுடன் சேர்ந்து ’நிலவு தூங்கும் நேரம்’ பாடல் பாடி தாலாட்டினார் எஸ். ஜானகி.
தாலாட்டியும் உருகவைத்தும் பக்தியில் லயிக்க வைத்துக்கொண்டிருந்த எஸ்.ஜான கிக்கு சவாலான ஒரு யூத்ஃபுல் பாடலை 1988ம் ஆண்டு ’அக்னிநட்சத்திரம்’ படம் மூலம் தந்தார் இளையராஜா. சவாலை மறுப்பாரா ஜானகி, ’ரோஜாப்பூ நாடி வந்தது..’ பாடலை மேற்கத்திய பாணியில் பாடி ஆட்டம்போட வைத்துவிட்டார்.
’தாய்மேல் ஆணை’ படத்தில் 1988ம் ஆண்டு சந்திரபோஸ் இசை அமைத்த ’மல்லியப்பு பூ பூத்திருக்கு’ பாடலை எஸ்.பி.யுடன் இணைந்து குரல் கொடுத்த எஸ்.ஜானகி அடுத்த ஆண்டு இளையாராவின் இசையில் ’அபூர்வ சகோதாரர்கள்’படத்தில் எஸ்.பி.பி யுடன் இணைந்து, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே..’ என்ற புத்துணர்ச்சி பாடலை படர விட்டார். மறுபடியும் கிராமத்து மெட்டுக்கு வா என்று எஸ்.ஜானகியை அழைத்துவந்தார் ராஜா.


1979ம் ஆண்டு ’கரகட்டக்காரன்’ படத்தில் ’மாங்குயிலே பூங்குயிலே..’ என்று பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பாடி சரித்திரம் படைத்த படத்தில், தன்பெயரையும் பதிய வைத்துக்கொண்டார் எஸ்.ஜானகி. இப்பாடலை குறும்புக்காரா பாடலாசிரியர் கங்கை அமரன் எழுதினார். பிரமாண்ட அரங்குகள் கிடையாது, மேற்கத்திய நடனம் கிடையாது, கவர்ச்சி கிடையாது, படம் முழுவதும் ஹீரோ ராமராஜன் உடன் நடித்த கவுண்டமணி, செந்தில் போன்றவர்களுக்கு வேட்டிதான் காஸ்டியூம். ஹீரோயினாக அறிமுகமான நடிகை தேவிகாவின் மகள் கனகாவுக்கு தாவணி, பாவாடை சட்டைதான் உடை அலங்காரம். இது எல்லாவற்றையும் பிரமாண்டமாக்கியது இளையாராஜவின் இசை. ’மாங்குயிலே பூங்குயிலே’ பாடலை பாடாத உதடுகளே கிடையாது என்றளவுக்கு மெகா ஹிட்டானது.
’புது நெல்லு புது நாத்து’ (1991)படத்திற்கு ’கறுத்த மச்சா..’ பாடலை ராஜா இசையில் முத்துலிங்கம் எழுத்தில் பாடினார்.
1992ல் அபிராமி அபிராமி என அந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களை அலைபாய வைத்த கமலின் ’குணா’ படத்திற்காக, ’உன்னை நானறியேன்..’ பாடலை கமல்ஹாசனுடன் இணைந்து ராஜா இசையில் பாடினார். இப்பாடல் இயற்றியவர் வாலி. ’ராசாவே உன்னை விடமாட்டேன்..’ என்று கணீரென ’அரண்மனை கிளி’ படத்திற்காக ராஜா இசையில் 1983ம் ஆண்டு பாடிய ஜானகி மறுபடியும் ஒரு புது இசை உலகிற்குள் நுழைந்தார்.
எஸ்.ஜானகி இவ்வளவு பேசுவாரா? என்ற சம்பவங்களும் நடந்திருக்கிறது. விடியட்டும் பார்க்கலாம்.

எஸ்.ஜானகி தொடர் 2ம் பகுதி முடிவு

-கண்ணன்