சித்திரவதையால் சவுதியில் உயிருக்குப் போராடும் தமிழக பெண்! 

111111111

நெல்லை:

வீட்டு பணிக்காக சவுதி சென்ற பெண், அங்கே சித்திரவைத செய்யப்படுவதாகவும், அவரை மீட்டு அழைத்து வரவேண்டும் என்றும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அரிகேசவ நல்லூரை சேர்ந்தவர் சேட். இவர் தனது சகோதரி மகன் ஜாபருடன்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆட்சியரிடம்  அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“எனது சகோதரி சுலைமாள்,  சீர்காழியை சேர்ந்த அன்புராஜ் என்ற முகவர் மூலம் கடந்த மே மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிக்கு சென்றார். அங்குள்ள ஏஜெண்டுகள் அவரை  வெவ்வேறு இடங்களில் வீட்டு வேலைக்கு  அனுப்பி அதிக நேரம் பணி செய்யும்படி நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள்.  மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பாஸ்போர்டை பறித்து வைத்து கொண்டனர்.  அவருக்கு பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனை எனது சகோதரி அங்குள்ள இன்னொரு தொழிலாளிக்கு தெரிவிக்க, எங்களுக்கு தகவல் வந்தது.

இதற்கிடையே  தகவல் தெரிவித்ததை தெரிந்து கொண்ட அங்குள்ள சவுதி குடும்பத்தினர் எனது சகோதரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வாந்தி எடுத்ததாகவும் ஆனால்  மருத்துவமனையில் சேர்க்காமல் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே உயிருக்குப்போராடும் எனது சகோதரியை மீட்டு தரவேண்டும்” என  அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.