சி ஆர் பி எஃப் வீரர்களை வான்வழியே அழைத்துச் செல்ல அனுமதி இல்லை

புல்வாமா

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களை வான் வழியே அழைத்துச் செல்ல விரும்பிய சி ஆர் பி எஃப் க்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவலகள் வந்துள்ளன.

நேற்று முன் தினம் சுமார் 2500 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 200 கிலோவுக்கு மேல் வெடிமருந்து கொண்ட ஸ்கார்ப்பியோ காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் அந்த வாகனங்களில் மோதியதில் 44 பேர் மரணமடந்துள்ளனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு தாக்குதல் நடக்கலாம் என இடம் மற்றும் நேரம் குறிப்பிடாமல் ஏற்கனவே உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆனால் சிஆர்பிஎஃப் அதை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன. இது முழுக்க முழுக்க கண்காணிப்புத் துறையின் கவனக்குறைவால் நடந்துள்ளதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் அளித்த அதிகாரபூர்வமற்ற தகவலில், “நாங்கள் காஷ்மீர் மாநில பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளோம். ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையில் பயணம் செய்வது ஆபத்தானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அதனால் இந்த வீரர்களை நாங்கள் விமானம் மூலம் வான்வழியே பயணம் செய்ய வைக்க முயன்றோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு மேலிடம் அனுமதி அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி விபிஎஸ் பன்வார், “78 வாகனங்களில் அத்தனை வீரர்களையும் ஒரே நேரத்தில் அனுப்பியது தீவிரவாதிகளுக்கு அல்வா சாப்பிடுவதை போல் அமைந்து விட்டது. இத்தனை பேரை ஒரே நேரத்தில் அனுப்பியது சரியான முடிவில்லை. அந்த வாகனங்கள் வந்த அதே வழியில் 200 கிலோவுக்கு மேல் வெடி பொருட்களை ஏடுத்து ஒரு வண்டி எவ்வாறு வந்துள்ளது? விடுமுறை முடிந்து செல்லும் வீரர்களுக்கு ஏன் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை” என கேட்டுள்ளார்.