சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் – கருணாநிதி அறிக்கை

இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் நுழைவு கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் உரிமையாளர்கள் பாதிப்பதோடு, சரக்கு வாகன வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 350க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 44 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன.

toll_1825726f

இவற்றில் 26 இடங்களில்  செப்டம்பர் 1 ஆம் தேதியும், 18 இடங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதியும் கட்டணம் அதிகரிப்பது என்பது நடைமுறையிலே உள்ளது. அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், துhத்துக்குடி, வேலுhர், நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம்
12 சதவிகிதம் வரை உயர்த்தப்படவுள்ளது.

சுங்கக் கட்டணங்களையே ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த அக்டோபரில் லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. படிப்படியாக சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை மேலும் உயர்த்துவது என்பது லாரி உரிமையாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

karuna dmk
சுங்கச் சாவடிகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் தான் சாலை பராமரிப்பு எதையும் செய்யாமல், இதன் பயனை அனுபவித்து வருகிறார்கள். சுங்கக் கட்டணத்தால் நடுத்தர மக்களும், வியாபாரப் பெருமக்களும், லாரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணத்தை மேலும் உயர்த்துவது என்பது வேண்டாத வேலையாகும். எனவே மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.