சென்னை கலவர பூமியில் ஸ்டாலின் விசிட்

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்ட பிறகும், நிரந்தர சட்டம் வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.

இதற்கிடையில் போராட்ட குழுவில் சமூக விரோதிகள் ஊடுறுவி போராட்டத்தை திசை திருப்பியதாக குற்ச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வற்புறுத்தினர்.

இவ்வாறு வெளியேற்றிய போது சென்னை மெரினாவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. தடியடி, காவல் நிலையத்துக்கு தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் வாகனங்களுக்கு தீ உள்ளிட்ட பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தது.

சென்னை ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், வடபழனி, வியாசர்பாடி, நடுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட இந்த பயங்கர கலவரம் நாட்டையே உலுக்கியது. இதில் போலீசார் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டினம்பாக்கத்தில் மீனவர்கள் வசிக்கும் நடுக்குப்பம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது நிருபர்களிடம் ஸ்டாலில் கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக முதல்வர் கூறுவது உளவுத்துறை தோல்வியை காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் மீனவ மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.