rosaiah_158319f

 

மிழக கவர்னர் ரோசய்யாவை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

மேலும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: !

  1. அண்மையில் சென்னை மாநகரைச் சீரழித்த, முன்னெப்போதும் கண்டிராத வெள்ளம், செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் அலட்சியமான, கவனமற்ற, மக்கள் விரோத நிர்வாகத்தால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான, துரதிர்ஷடவசமான அப்பாவி மக்களின் உயிரிழப்பும், ஏராளமான உடைமைகளின் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
  2. 2015ஆம் ஆண்டின் பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மாநகரம் இடைவிடாத, முன்னெப்போதும் கண்டிராத மழையை எதிர்நோக் கியிருந்தது. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சக வானிலை ஆராய்ச்சித் துறையின் புவி அமைப்பு அறிவியல் நிறுவனம் 15.10.2015 அன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அத்துறை, தமிழ்நாட்டில் பருவமழை வழக்கமான அளவைவிட 112 சதவிகிதமும் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும், நீண்ட கால சராசரியைவிட கூடுதலாக இருக்கும் என்றும் முன்கூட்டியே தெரிவித்தது. மேலும், 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையால் தமிழ்நாட்டில் வழக்கமான மழையைவிட 90 சதவிகிதம் அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மாநகரில் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் மட்டும் 500 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என்று சர்வதேச பருவநிலை ஆய்வுகள் தெரிவித்திருந்தன. சென்னையிலுள்ள வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பும் அதுபோலவே இருந்ததுடன், கடுமையான மழைக்குத் தயாராக இருக்கும்படி அரசை உரிய நேரத்தில் எச்சரித்தது.
  3. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு குறித்து வல்லுநர்களின் முன்னறிவிப்பும், உரியகால எச்சரிக்கைகளும் இருந்தும் கூட, உள்வரும் தண்ணீரைக் கொள்வதற்கும், எதிர்பார்க்கப்பட்ட மழையைச் சமாளிக்கவும் ஏதுவாக, ஏரியிலிருந்து படிப்படியாக நீரை வெளியேற்ற பொதுப் பணித்துறை நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
  4. சர்வதேசப் பருவநிலை முன்னறிவிப்புகளும் வானிலை ஆய்வுத்துறையும் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் 500 மிமீ மழை எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், இவ்வளவு அதிகமான நீர் வரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித் துறையினர் தயார்படுத்தியிருக்க வேண்டும். இந்தப் பேரழிவை மாநில அரசு முன்கூட்டியே உணர்ந்து, இடைவிடாத மழையால் ஏற்படும் எந்தவிதமான ஆபத்தான நிலைமையையும், அதையடுத்து ஏரிக்கு வரும் மிக அதிகமான நீரையும் கையாள்வதற்கு முன்கூட்டியே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவேண்டும். 24.11.2015க்கும் 30.11.2015க்கும் இடையில் சென்னையில் குறைந்த அளவு மழை பெய்தபோது ஏரியிலிருந்து வெளியேறிய நீர் குறைவாக இருந்தது, ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரை கொள்ளளவு மட்டம் பராமரிக்கப்பட்டது. இது பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரின் மிகமோசமான, தவறான கணிப்பாகும். ஏனெனில் மதகுகளைத் திறந்து, நீரை அடையாறில் பாய விட்டு, கொள்ளளவு மட்டத்தை 75 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்து இருந்திருந்தால் 1.12.2015 மற்றும் 2.12.2015 ஆகிய தேதிகளில் மிக அதிகமான நீர் திறந்துவிடப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.
  5. இருப்பினும், நீர்மட்ட அளவினைப் பராமரிப்பதிலும், கொள்ளளவு மட்டத்தை மேலாண்மை செய்வதிலும் பொதுப் பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், 1.12.2015 அன்று அதிகாலை 5.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் கண்மூடித்தனமாகத் திறக்கப்பட்டு, 33,500 கன அடி நீர், ஏற்கனவே முன்பு வெளியேற்றப்பட்ட நீர் மற்றும் இதர நீர் நிலைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் ஆகியவற்றால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. “”””அடையாறு ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது”” என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலைதான் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது. இதைவிட அதிர்ச்சியானது என்னவென்றால், காவல்துறையின் வழக்கமான செயல்பாட்டு முறைகள் முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. உள்ளூர் மக்களை எச்சரிக்கை செய்ய காவல்துறை தவறிவிட்டது. பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதன் விளைவாக மாநகரம் முழுவதும் அதன் புறநகர்ப் பகுதிகளும் சொல்லொணாத் துயருக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், கடந்த ஒருவார காலமாக மின்சாரம் இல்லை. பெட்ரோல் டீசல் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி, டீசல் கிடைக்காததால் தொலைத்தொடர்பு சேவை அமைப்புகள் அறவே செயல்படவில்லை. தெருக்களில் பிணங்கள் மிதந்தன. ஏராளமானோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி அவர்களுடைய சொந்த மாநகரிலேயே அகதிகளாயினர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், இயல்பு நிலையை மீட்பதிலும் மாநில நிர்வாகம் முற்றிலும் தவறிவிட்டது.

இத்தருணத்தில் நாங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடும் மழையால் பயிர்கள், உயிர்கள், உடமைகள் ஆகியவற்றுக்கு மிகப் பெருமளவில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். இதற்குப் போதுமான இழப்பீடு வழங்கப்படவேண்டும்.”

இவ்வாறு தனது மனுவில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.