japan
டோக்கியோ:
ஜப்பானின் வடக்கு தீவு பகுதியில் உள்ளது ஹொக்காடியோ என்ற ஊர். இங்கு காமி&ஷிரதகி என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே ரயில் வந்து செல்கிறது.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பே இந்த ரயில் நிலையத்தை மூட ஜப்பான் ரயில்வே நிர்வாகம் முடிவு  செய்தது. தொலை தூரத்தில் உள்ள இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால் இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்திருந்தது. ஆனால், இந்த ரயிலில் ஒரு மாணவி மட்டும் தினமும் பள்ளிக்கு சென்று வருவது ரயில்வே நிர்வாகத்துக்கு தெரியவந்தது.
அந்த மாணவிக்காக ரயில் நிலையத்தை தொடர்ந்து செயல்பட ரயில்வே உத்தரவிட்டது. அந்த மாணவி தினமும் பள்ளிக்கு இங்கிருந்து தான் ரயிலில் சென்று வந்தார். பள்ளி படிப்பு முடிந்த பிறகு அவர் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி இருக்கும் இடத்திற்கே ரயில் செல்லும் வகையில் ரயிலை நீட்டிதனர். அவர் கல்லூரி செல்வதற்கு ஏற்பவும், அவர் கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்கு ஏற்பவும் ரயில் நேரத்தை மாற்றி அமைத்தனர்.
அவர் பட்டப்படிப்பு வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. அப்போது இந்த ரயில் நிலையம் மூடப்படவுள்ளது. ஒரே ஒரு மாணவிக்காக ஜப்பான் அரசு இவ்வாறு முயற்சி மேற்கொண்ட செய்தி வெளியில் பரவியதை தொடர்ந்து அரசுக்கு பாராட்டு மழை பொழிந்தது. ‘‘ எனக்காக ரயிலை நீட்டிக்கும் அரசு இருக்கும் போது எதற்காக நாங்கள் சாக வேண்டும்’’ என்று ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஒரு அரசு நிர்வாகம் என்பது அடித்தட்டு மக்கள் நலன் மற்றும் உரிமைக்காக பணியாற்ற வேண்டும். அதில் ஒரு குழந்தையை கூட விட்டுவிடக் கூடாது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
ஜப்பான் ஏற்கனவே பல துயரங்களை சந்தித்து வருகிறது. மனித பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. வயதான மக்களே அதிகம் உள்ளனர். 2060ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை தான் அங்கு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் தான் நாட்டின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தான்  மேற்கண்ட ரயில் நிலையமும் மூடப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.