ஜெ. கூட்டத்தில் ஒருவர் பலி

admk_cadre_0

விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர்  வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலியானார்.  காவலர்கள் உட்பட மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அவர் வருவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே, தொண்டர்கள் திரட்டிக்கொண்டுவரப்பட்டனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடும் வெயிலால் இவர்கள் அவதிப்பட்டனர்.

ஜெயலலிதா வந்து  கூட்டத்தில் பேச ஆரம்பித்தார். அப்போது கூடியிருந்தவர்களில் ஏழு பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்களில், ராதாகிருஷ்ணன் என்பவர்  மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெயமணி, வடக்கு வெள்ளூரை சேர்ந்த லோகநாதன், வில்வபெருந்துறையை சேர்ந்த ராமஜெயம், காடாம்புலியூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன், விருத்தாசலத்தை சேர்ந்த முத்துலட்சுமி, ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த பூங்காவனம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே காவல் பணியில் இருந்த விஜயசாந்தி என்பவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததில் காயமடைந்தார்.   சிதம்பரத்தை சேர்ந்த மற்றொரு காவலரான கருணாகரன் என்பவருக்கும் வெயிலால் மயங்கி விழுந்தார்.

இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.