டார்ச்சர் கொடுத்தார்!:  கவர்ச்சி நடிகை மீது நடிகர் புகார்

வர்ச்சி நடிகை ராணி தனக்கு டார்ச்சர் கொடுத்ததோடு காவல்துறையிலும் பொய்ப்புகார் அளித்தார் என்று நடிகர் சண்முகராஜன் புகார் அளித்துள்ளார்.

“ஜெமினி” படத்தில் “ஓ போடு..” பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி பிரபலமானவர்  ராணி. தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி வேடமேற்று நடித்தார்.

“விருமாண்டி” படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் சண்முகராஜா.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் இருவரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை அருகே செங்குன்றத்தில் இத்தொடரின் படப்பிடிப்பு நடந்துவந்தது.

அப்போது சண்முகராஜன் தன்னை தாக்கிவிட்டதாகவும் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்ததாகவும்  செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சண்முகராஜனை காவலர்கள் விசாரித்தனர்.

ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே தனது புகாரை ராணி திரும்பப் பெற்றார்.

இந்த நிலையில் ராணிதான் தன்னை டார்ச்சர் செய்தார் என்று சண்முகராஜன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

“தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது ஒரு காட்சியில் ராணி என்னை அடிக்க வேண்டும். அப்போது ராணி என்னை நிஜமாகவே அடித்துவிட்டார்.  இதனால்,  “ஏன் இப்படி அடித்தீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, “இயக்குநர்தான் அடிக்கச் சொன்னார்” என்றார்.

அதன் பிறகு  இரண்டு தினங்கள் ஒன்றாக நடிக்க மறுத்துவிட்டேன்.  அதன் பிறகு  ஜவுளிக்கடை ஒன்றில் இருவரும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது ராணி என்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துவிட்டுச் சென்றார். நான், “ எனக்கு இத்தநை டார்ச்சர் கொடுத்த பிறகும் இப்படி கிண்டலாக சிரிக்கிறீர்களே”  என்று கேட்டேன். அவர் அதற்கு திமிராக பதில் அளித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பானது.

உடனே அவர் காவல்நிலையம் சென்று என் மீது புகார் கொடுத்துவிட்டார். நான்தான் அவரைத் தாக்கியதாகவும், நான் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் புகாரில்  பொய்யாக தெரிவித்திருந்தார்.

பிறகு நானும்,  தொடரின் இயக்குநரும் காவல்நிலையம் சென்றோம். அங்கு எங்களை ஐந்து நிமிடம் விசாரித்தார்கள். பிறகு காவலர்களிடம் அனுமதி பெற்றி வந்து, காட்சிகளை நடித்துக்கொடுத்தேன்.

ராணி என் மீது அபாண்டமாக பாலியல் புகார் கொடுத்ததால் நானும், எனது குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளோம்.

ஆகவே இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். நடிகர் சங்கம் இருவரையும் விசாரிக்கட்டும். என் மீது தவறு என்றால் எனக்கு ரெட் கார்டு கொடுக்கட்டும். ராணி மீது தவறு என்றால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கட்டும். இதற்கு நடிகர் சங்கம் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று சண்முகராஜன் தெரிவித்தார்