தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வழிமுறைகள்

சென்னை

மிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் இணையதளம் மூலம் சேர அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.  தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.  தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கை இணைய தளம் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் வெளியாகி உள்ளன.

நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர இணைய தளம் மூலம் 20.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணப்ப பதிவு www.tngsa,in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இது போன்று சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய 25.07.2020 முதல் 05.08.2020 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் 044-22351014 / 22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

கொரோனா நோய்த் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஜூலை 20 முதல் தேதி முதல் இணைய தளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.