தமிழகம் 2- வது இடம்: மாணவர் தற்கொலையில்!

a

டில்லி :

கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் நேற்று இது குறித்து தெரிவித்ததாவது:

“மனஅழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா முழுதும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் இப்படி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 1,191 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 மாணவர்களும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2013ம் ஆண்டில் இந்தியா முழுவதிலுமாக 8,423 மாணவர்கள் தற்கொலை செய்து மரணமடைந்தனர். இதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,141 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். “ இவ்வாறு ஸ்மிருதிஇராணி தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், “தற்போதைய கல்வி முறை மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். படிப்பு தவிர இதர விசயங்களில் பெரும்பாலும் அவர்களை பங்கெடுக்க விடுவதில்லை. குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை, விளையாட்டு நேரத்தில்கூட படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.

மாணவர்களுக்கு கல்வியோடு, விளையாட்டு, நன்னெறி ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதற்கும் உரிய நேரம் ஒதுக்க வேண்டும்.

மேலும், தற்போதைய சினிமா, டி.வி, சமூகவலைதளங்கள் ஆகியவே மாணவர்களுக்கு வேண்டாத விசயங்கள் பலவற்றைச் சொல்லி அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகின்றன.   இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed