கோவை:
மோடியின் தமிழக வருகை பாஜவுக்கு புத்துயிர் கொடுக்கும் என்று எதிர்பார்த்த கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கோவை வந்தார். 5 மணி நேர திட்டத்துடன் வந்த அவர் இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் பாஜ பொதுக் கூட்டத்தில் பேசினார். மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகியவற்றுடன் தமிழக சட்டசபை
தேர்தலும் விரைவில் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை பொதுக் கூட்டத்தில் மோடியின் பேச்சு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக அனல் பறக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், மோடியின் பேச்சு அத்தகைய வழியில் செல்லாமல் உப்புச் சப்பின்றி இருந்ததால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக அரசியல் குறித்தோ, ஆளும் கட்சியான அதிமுக, பிரதான எதிர்கட்சியான திமுக குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக தமிழகத்தில் ஏதோ காங்கிரஸ் வலுவான கட்சியாக இருப்பது போல், காங்கிரஸை குற்றம்சாட்டி முழங்கிவிட்டுச் சென்றார் மோடி.
மாணவர் ரோஹித் தற்கொலையை மையமாக வைத்து தலித் துருப்புச் சீட்டை மட்டும் மோடி பயன்படுத்தியுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது. பேச்சில் கூட்டணி குறித்தும் எந்தவித சூசக அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பாஜகவினர் உற்சாகமின்றி காணப்படுகின்றனர்
2014ம் கூட்டணியில் இருந்த மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சியும் தற்போது பாஜவுடன் கூட்டணியில் இல்லை. ‘‘ திமுக முதல்வர் வேட்பாளர் கருணாநிதி அல்ல. ஸ்டாலின் தான் அந்த பொறுப்பை இந்த முறை ஏற்பார். அதனால் பாஜ, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முன் வர வேண்டும்’’ என சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து தான் பாஜவை பொறுத்தவரை தேர்தல் முன்னேற்ற செய்தியாக இருக்கிறது.
இதற்கு ஏற்றார்போல் ஜெயலலிதாவை வீழ்த்த கூட்டணிக்கு அனைத்து கட்சிகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். இது பாஜவுக்கு மறைமுக அழைப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இல்லை என்றால் மதசார்பற்ற கட்சிகளுக்கு அழைப்பு என்று தான் கருணாநிதி அறிவித்திருப்பார் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் பாஜ மாறி மாறி கூட்டணி வைத்த வரலாறும் இருப்பதால் எதுவும் சாத்தியமாகலாம் என பாஜவினர் கூறுகின்றனர்.