தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

jayalalitha61

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

’’இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள், அந்நாட்டு அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்யப்பட்டுள்ள அதேசமயம், மறுபுறம் கைது நடவடிக்கையும் தொடர்கிறது. அந்த வகையில் கடந்த 5-ம் தேதி 4 மீனவர்களும், 7-ம் தேதி 9 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், பாக் ஜலசந்தியில் வரலாற்று ரீதியாக தங்களுக்கு உரிமையுள்ள இடத்தில், தங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலை அமைதியாக செய்யும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் செல்லொணா துன்பங்களை அனுபவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் “மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில் தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, இலங்கை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளும்படி வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேணடும். 7-ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 13 மீனவர்களையும் 85 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார்.