தமிழ்ப் புத்தாண்டு – விஷு தினம்: ஜெயலலிதா வாழ்த்து

oo

தமிழ்ப் புத்தாண்டு – விஷு தினம் கொண்டாடும் மக்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ‘‘தமிழ்ப் புத்தாண்டு’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:–

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்தப் பொன்னாளில் என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘‘தமிழ்ப் புத்தாண்டு’’ நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ‘‘ஆதிமனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்தான்’’

என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கேற்ப, உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியை பேசும் மூத்த குடிமக்களான தமிழ்ப்பெருமக்கள், ஆண்டாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். வலிமையும், வளமும் மிக்க தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடரவும், அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஊக்கத்தோடு உழைப்போம், புதிய சாதனைகளை படைப்போம் என மலரும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

இந்த இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என வாழ்த்தி, எனதருமை தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த ‘‘தமிழ்ப் புத்தாண்டு’’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ‘‘விஷு தின’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:–

மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு திருநாளாம் ‘‘விஷு’’ திருநாளில், மலையாள மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக் காத்து வாழும் மலையாள மக்கள் விஷு பண்டிகையன்று, தங்கள் இல்லங்களில் அரிசி, காய் கனிகள், கொன்றை மலர், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக் கனியை முதலில் கண்டு, வரும் இந்தப் புத்தாண்டு தங்கள் வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி வழிபடுவார்கள். இப்புத்தாண்டு திருநாளில் உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு அறுசுவை விருந்துண்டு மகிழ்வார்கள்.

இந்தப் புத்தாண்டு மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது ‘‘விஷு’’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி