vijai

சென்னை:

தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர் வைத்திலிங்கம் கொண்டு வந்த, சபை உரிமை மீறல் பிரச்னை குறித்து விசாரிக்க, சட்டசபை உரிமை குழு கூட்டம், நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் புறக்கணித்தார். இதையடுத்து திமுகவுடன், தேமுதிக நெருங்கிவருகிறதோ என்ற எண்ணம் அரசியல் மட்டத்தில் ஏற்படுள்ளது.

வீட்டு வசதி மற்றும் வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம், ஆகஸ்ட், 25ம் தேதி, மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, ‘நான்  சொல்லாத கருத்தை சொன்னதாக திருவாரூர் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, தன் அறிக்கையில் கூறியிருக்கிறார். இது, ஆகஸ்ட், 30ல், முரசொலி மற்றும் மாலை முரசு பத்திரிகையில், செய்தியாக வந்துள்ளது. இது உரிமை மீறல் பிரச்னை; இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.

சபாநாயகர், அந்த மனுவை விசாரணைக்காக, சட்டசபை உரிமை குழுவுக்கு அனுப்பினார். இதையடுத்து நேற்று உரிமை குழு கூட்டம் நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். தி.மு.க., – எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ்  எம்.எல்.ஏ., விஜயதாரணி உட்பட, 13 பேர் பங்கேற்றனர்.  ஆனால் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் இதில் கலந்துகொள்ளவில்லை.

“கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டதை விஜயகாந்த் விரும்பவில்லை. ஆகவேதான் உரிமைக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். இதன் மூலம் திமுக மீது விஜயகாந்த்துக்கு கனிவான பார்வை இருப்பதை உணர முடிகிறது. எதிர்வரும்  சட்டசபை தேர்தலில் திமுக – தேமுதிக கூட்டணி ஏற்படவும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்று திமுக ஆதரவாளர்கள் சிலர் செய்தியை பரப்புகிறார்கள்.

ஆனால் தேமுதிக தரப்பிலோ, “அப்படி எல்லாம் இல்லை. வேறு பணி இருந்ததால் எங்கள் தலைவர் உரிமை குழு கூட்டத்துக்குச் செல்லவில்லை. ஆனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த பாபு முருகவேல் எம்.எல்.ஏ. கலந்துகொண்டாரே”  என்கிறார்கள்.

“சட்டசபைக்கும் சரி, அது தொடர்பான கூட்டங்களுக்கும் செல்லாமல் புறக்கணிப்பது விஜயகாந்துக்கு புதிதல்ல. ஆகவே  உரிமைக்குழுவுக்கு அவர் போகாததை வைத்து திமுக – தேமுதிக கூட்டணி ஏற்படும் என்பது தவறு” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.