திமுக கூட்டணியில் மனித நேயமக்கள் கட்சி!

dmk

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று காலை 11 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நேரம் நடந்தது.

கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில்தான் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம்.

தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் வரும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. குழுவினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்று தெரிவித்தார்.