திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி:
திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,004 ஆக மட்டுமே இருந்தது. அதன்பின் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை மேலும் 1,000-ஐத் தாண்டிவிட்டது. இன்றைய நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் 3,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது, வெளிநாடு மற்றும் வெளியூரில் வந்தவர்கள் மூலம் திருச்சி மாநகரில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரகப் பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பாதிப்பு காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது அவர்களிடம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் போலவே உயிரிழப்போர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து தற்போது அரை சதத்தைக் கடந்து விட்டது. அரியமங்கலம், ஸ்ரீரங்கம் கோட்டங்களில் தலா 7, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 11, பொன்மலை கோட்டத்தில் 8 என திருச்சி மாநகரில் 33 பேரும், அந்தநல்லூரில் 3, மணப்பாறை, மணிகண்டத்தில் தலா 2, மருங்காபுரி, திருவெம்பூரில் தலா 4, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரத்தில் தலா 1 என ஊரகப் பகுதிகளில் 18 பேர் என 51 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் இந்த எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

இந்த் நிலையில், திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

1 thought on “திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

Comments are closed.

You may have missed