திருச்சி: சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்!

திருச்சியில் இருந்து விமான நிலைய சுற்றுச்சுவரை இடித்துச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆபத்தான நிலையிலேயே தொடர்ந்து மூன்று மணி நேரம் பறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, 130 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று நள்ளிரவு 1.19 மணியளவில் துபாய்க்கு கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் போது, ஓடுதளபாதை வழிகாட்டும் மின்கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றில் விமானத்தின் சக்கரங்கள் மோதின.  ஆனாலும் விமானம் சரியாக இயக்குகிறது என கருதி விமானி தொடர்ந்து இயக்கியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு கருதி, ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் மஸ் கட் வரை சென்ற விமானம், மீண்டும் மும்பைக்கு திரும்ப சொல்லி அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.  பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மும்பையில் அதிகாலை தரையிறங்கிய அந்த விமானத்தை சோதனை செய்த பொறியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் விமானத்தில் நடுபகுதி கடுமையாகச் சேதமடைந்து இருந்தது.   ஆபத்தான நிலையிலேயே இந்த விமானம் தொடர்ந்து மூன்று மணி நேரம் பறந்துள்ளதும் தெரியவந்தது.

இப்படி கவனக்குறைவாக விமானத்தை செலுத்துயது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்துவருவதாக விமான போக்குவரத்துத்துறை அதிகார்கள் சற்று முன் தெரிவித்துள்ளனர்.