திருஷ்டி கழிஞ்சதா நினெச்சுக்கிறேன்: கதறி அழுத துரை முருகன்

 

1

காட்பாடி:  தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இவரை அறிமுகம் செய்யும் கூட்டம், காட்பாடியில் நடந்தது. இக் கூட்டத்தில் பேசிய  துரைமுருகன், “ எனது நாற்பது 0 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில், எனக்கென்று எந்த கோஷ்டியையும் நான் சேர்த்ததில்லை.  எனக்கு வேட்பாளர்களை நிறுத்தும்  அதிகாரம் இல்லை.

இதில், ‘சீட்’ கிடைக்காதவர்கள், என் கொடும்பாவியை கொளுத்துகிறார்களே.. என் கொடும்பாவியை கொளுத்தியதால், எனக்குள்ள திருஷ்டி கழிந்தது என்று நினைத்துக்கொள்கிறேன். ஏன்… என்னையும் கொளுத்தட்டும்… அதற்கும் தயாராக இருக்கிறேன்.

இன்னும், மூன்றே மூன்று திட்டம் மட்டும்தான் கொண்டு வர வேண்டும். காட்பாடியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பொன்னையில் அரசு கலைக் கல்லுாரி, லாலா பேட்டையில் தொழில் பூங்கா கொண்டு வந்து, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இவற்றை செய்து முடித்தால் போதும்.

நான் இறந்தால், தொகுதி மக்கள் வந்து என்னை துாக்கிச் செல்லும்போது, நான் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி   இந்த புண்ணியவான் இதை செய்தான் என்று சொன்னால், அதுவே எனக்கு போதும்” என்று பேசிக்கொண்டே போனவர் திடுமென கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.