Thani-Oruvan-Movie-Stills-11

 

“டப்பிங் டைரக்டர்” என்று கிண்டலடிக்கப்படுபவர் இயக்குநர் ஜெயம் ராஜா. ஆனால் “தனி ஒருவன்” படத்திலிருந்து தனது பெயரை “மோகன் ராஜா” என்று மாற்றிக்கொண்டதைப்போல, தன் மேக்கிங் ஸ்டைலையும் வித்தியாசப்படுத்தி ஈர்க்க வைத்துவிட்டார்.  தமிழில் இவரது முதல் நேரடி திரைப்படமாக மட்டுமின்றி அதிரடி திரைப்படமாகவும் அமைந்துவிட்டது, இந்தப்படம்.

சமுதாயத்தில் குற்றங்கள் நடப்பது ஏன்.. அதைச் செய்பவர்கள் யார் என்ற கேள்வி சிறுவயதிலிருந்தே மித்திரன் (ஜெயம்ரவி) மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்டவர்களில் நெம்பர் ஒன் குற்றவாளியை அழிக்க வேண்டும் என்று சபதமெடுத்து, காவல் பணியில் சேர்கிறார்.

அந்த மாஸ் வில்லன், சித்தார்த் அபிமன்யு (அரவிந்த்சாமி) என்பதை அறிந்து அவருடன் யுத்தம் புரிய ஆரம்பிக்கிறார்.

வென்றாரா என்பது மீதிக்கதை.

பேராண்மைக்குப் பிறகு, அதிரடி வேடம் ஜெயம்ரவிக்கு. பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.  அவர் கண்களில் தெரியும் வெறி, கலங்கவைக்கிறது.

நயன்தாரா இருக்கிறார். நல்லவேளையாக காதல் கலாட்டா காட்சிகள் இல்லை. ’எனக்கு ப்ரபோஸ் பண்ணத் தெரியாது’ என்கிற காட்சியில் முத்திரை பதிக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அரவிந்த்சாமி. வில்லனாக வந்து அமைதியாக அதகளம் செய்கிறார். “தலைவர் செஞ்ச கொலையை நான் செஞ்சதா ஜெயிலுக்குப்போறேன்..  நீ எம்.எல்.ஏ.  சீட் கேளுப்பா” என்று தந்தைக்கே உபதேசம் செய்யும் அதகள கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார் அரவிந்த்சாமி.

தம்பிராமையா, நாசர் எல்லோரும் வழக்கம்போல இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வசனமும் பஞ்ச் தான்.  “நாளிதழ்கள்ல வர்ற வணிக செய்திகளை நாம படிக்கிறதே இல்லை. ஆனா அந்த பக்கம்தான், மத்த பக்கத்துல வர்ற செய்திகளை முடிவு செய்யுது”,  “ பெண் சுதந்திரம்னா ஆம்பளைங்க செய்யற தப்ப மட்டுமே வரிசைப்படுத்துறது இல்லை’, ‘இருட்டை விரட்ட சூரியன் தேவை இல்லை. ஒரே ஒரு தீக்குச்சி போதும்’… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இசை, பாடல், ஒளிப்பதிவு அத்தனையும், படத்துக்கு வலு சேர்க்கிறது.

இயக்குநர் மோகன்ராஜாவுக்கு ஒரு பொக்கே!