thoongavanam-review-375x270

பாபநாசம், உத்தம வில்லன் ஆகிய சாஃப்ட் படங்களுக்குப் பிறகு கமல் நடிக்கும் விறு விறு ஆக்‌ஷன் த்ரில்லர்.

பணத்துக்கா எதையும் செய்யும் இயல்பான போலீஸாக கமல். காஸ்ட்லியான போதைப் பொருள் அவருக்கு கிடைக்க, அதை திட்மிட்டு மறைத்துவைக்கிறார். போதைப்பொருளுக்கு உரியவரான (கடத்தல்காரர்) பிரகாஷ்ராஜ், கமலின் மகனை கடத்திவைத்துக்கொண்டு, போதைப்பொருளை கேட்கிறார்.  கமல் அதற்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால் வைத்த இடத்தில் போ.பொருளைக் காணவில்லை. இதற்கிடையே  சக போலீஸ்காரர்களான  த்ரிஷாவும்,  கிஷோரும் கமலை பின்தொடர்கிறார்கள்.

காணாமல் போன போதைப்பொருள் என்ன ஆனது கமல் தன் மகனை மீட்டாரா.. என்று விறு விறுசுறு சுறுவாக சொல்லியிருக்கிறார்கள்.

கமலும், யூகிசேதுவும் இணைந்து போதைப் பொருளைக் கைப்பற்றும் அதிகாலை அதிரடி ஆபரேஷனில் துவங்கும் கதை,  எங்கேயும் சிறு தடங்கல்கூட இல்லாமல் அதிவேகமாக பயணிக்கிறது.

கமலுக்கு நடிப்பதற்கு ரொம்ப வேலை இல்லாத படம். ஆனாலும் கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.  போதைப்பொருளை மறைத்துவைப்பது, மகன் கடத்தப்பட்டுவிட்டான் என்று தெரிந்ததும் பதறுவது.. என்று எப்போதும் போல் சிறப்பு. முக்கியமாக,  கத்தியால் குத்தப்பட்டதன் வலியை  அவர் இயல்பாக வெளிப்படுத்தும் விதம் அருமை.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தருணங்களில் மது ஷாலினியை கமல் முத்தமிடுவதும் ஒரு கட்டத்தில் மதுஷாலினி கமலை முத்தமிடுவதும்..  61லும் கமல் 16தான் என்பதை நிரூபிக்கும் காட்சிகள்.

உலக தமிழ் சினிமா வரலாற்றிலேயே த்ரிஷா முதல்முறையாக போலீஸாக நடிக்கிறார்.  போலீசோ, போக்கிரிப்பெண்ணோ.. ஹீரோவுடன் டூயட் பாட வேண்டும் என்ற விதியை முறியடித்திருக்கிறார்கள். கமலுடன் அழகாக மோதுகிற வேடம் த்ரிஷாவுக்கு.  சண்டை போடுகிறார், சீரிஸான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும், இயக்குநருக்கும் பாராட்டுகள்.

பிரகாஷ்ராஜூம் வழக்கம்போல அசத்தல் நடிப்பு.  உட்கார்ந்த இடத்திலிருந்தே கமலை அவர் ஆட்டிவைக்கும் காட்சிகளில், அவரது கண்களில் தெரியும் கிண்டல் கலந்த வன்மம் அதிர வைக்கிறது.

பாபநாசம் படத்தில் முக்கிய கேரக்டரில் வந்த ஆஷா சரத்துக்கு இந்தப்படத்தில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர். கிஷோர், பாத்திரம் அறிந்துநடித்திருக்கிறார்.

படத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது படத்தில் ஒரே பாடல்தான். அதுவும் காதல் டூயட் இல்லை.

ஒளிப்பதிவாளர் சானு வர்க்கீஸ்ரசிக்கவைக்கிறார். குறிப்பாக இரவு விடுதியின் சூழலை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். அதோல கழி வறைகளின் மேற்சுவரில் போதைப் பொருள் பையைத் தேடும் அவரது கேமரா அசத்துகிறது.

விவாகரத்தான கமலின் மன நெருக்கடிகளைக் காட்டி அவர் மீது அனுதாபத்தை உருவாக்கும் திரைக்கதை சிறப்பு.   இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் திறமை, ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. தேவையற்ற ஒரு காட்சியோ, கதாபாத்திரமோ படத்தில் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே படம், வேகம் வேகம் வேகம். இடைவேளைக்குப் பிறகு சற்று வேகம் குறைகிறதுதான். ஆனால் கதையின் பின்னணியை விவரிக்க அது அவசியமே.

தரமான மசாலா படம்!   தவறவிடக்கூடாத படம்!