தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம்? காவல்துறையினர் கெடுபிடி

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தீர்ப்பு வருவதையொட்டி, நேற்றே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

போராட்டக் குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு துணி மூட்டை

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி  உள்ளது. இதன் காரணமாக  தூத்துக்குடி மக்கள் மீண்டும்  போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்து வதற்கான ஆலோசனையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவைச் சேர்ந்த 5 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து சுமார் 100 மீட்டர் அளவிலான கருப்பு துணியும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து ஆலையின் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் 100க்கும் முற்ப்பட்டோர் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பிடித்துச் சென்றவர்களை வெளியில் விட்டால் மட்டுமே காவல் நிலையத்தை விட்டு வெளியேறு வோம் என கூறி பொதுமக்கள் காவல் நிலைய வளாகத்திலேயே உட்கார்ந்து விட்ட நிலையில் கைது செய்யப்பட்ட  5 பேரையும் நள்ளிரவு காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

அப்போது பொதுமக்களிடம்  பேசிய  எஸ்பி முரளிரம்பா போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்காது  என்ற நிலைபாட்டில் உள்ளது என்று கூறி சமாதானப்படுத்தினார்.

ஆனால், இன்று பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உள்ளதால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.   காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  தூத்துக்குடி பஜார் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.