கோவை.ராமகிருட்டிணனுடன் மகேந்திரன் (முகநூல் பக்கம்)
கோவை.ராமகிருட்டிணனுடன் மகேந்திரன் (முகநூல் பக்கம்)

சென்னை:
திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை எரித்து, அதை படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்தார்.
இதை ஆதரித்தும் எதிர்த்தும் சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களது பதிவுகளுக்கு  விருப்பங்களும், விமர்சனங்களும் குவிகின்றன.
கொடியை எரித்த திலீபன் மகேந்திரனின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
திலீபன்,  கோவை. ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறார்.
இதையடுத்து நாம், கோவை. ராமகிருட்டிணனை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம்.
அவர், “இந்திய தேசிய கொடியை எரித்ததற்கான காரணங்களாக திலீபன் மகேந்திரன் கூறியிருப்பவை அனைத்தும் சரிதான். நாங்கள் இந்தி தேசிய கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றவர், “அதே நேரம், நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறை பற்றியும் யோசிக்க வேண்டும். திலீபன் மகேந்திரன், தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய முறை.. அதாவது தேசிய கொடியை எரித்தது..  எங்கள் அமைப்புக்கு உவப்பானதாக இல்லை. ஒரு அமைப்பில் இருக்கும்போது  அந்த அமைப்பினுடைய கட்டுப்பாட்டினுள் அமைப்பின் கருத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும்.   அதைத்தாண்டி தன்னிச்சையாக திலீபன் மகேந்திரன் செயல்பட்டுவிட்டார்” என்றார்.
“இது தொடர்பாக திலீபன் மகேந்திரன் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா” என்ற கேள்விக்கு, “திலீபன் மகேந்திரன், எங்களது அமைப்பில் எந்த பொறுப்பிலும் இல்லை.  உறுப்பினர் கூட இல்லை. ஆதரவாளராக சமீபத்தில் வந்திருக்கிறார். இன்னும் முழுமையாக அமைப்பினுள் வரவில்லை. அப்படிப்பட்டவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.