சரத் - சுந்தர்ராமன்
சரத் – சுந்தர்ராமன்

டிகர் சங்க தேர்தல் எந்தவிதத்தில் எல்லாம் பரபரப்பாகும் என்று கணிக்கவே முடியாது போலிருக்கிறது.

தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சுந்தர்ராமன் சமீபத்தில் விஷால் கூட்டிய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, சரத் மீது பலவித புகார்களைக் கூறினார். இதை தான் நடத்தும் “தமிழக அரசியல்” வாரமிருமுறை இதழிலும் பேட்டியாக வெளியிட்டார்.

அதில், “சங்க இடத்தை லீஸுக்கு கொடுக்க என்னிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார், அவருக்காக நான் எடுத்த படத்தை வைத்தே என்னை ஏமாற்றினார், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் நெருக்கம் என சொல்லி அங்கு தொழில் தொடங்கலாம் என்றார்” என்றெல்லாம் சரத் மீது அடுக்கடுக்காக புகார் கூறியிருந்தார்.

 

அந்த போஸ்டர்
அந்த போஸ்டர்

இந்த நிலையில், “மோசடி மன்னன் சுந்தர்ராமன்” என்று சென்னை நகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், “வங்கியில் பத்துகோடி மோசடி, சுந்தர்ராமன் கைது” என்று தினமலர் நாளிதழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த போஸ்டரில் அச்சடித்த அச்சகத்தின் பெயர் இல்லை. போஸ்டர்கள் அடிக்கும்போது அச்சகத்தின் பெயரோடு, அதன் தொடர்பு எண்ணும் இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த நிலையில், “சரத்குமார் தரப்பினர்தான் இது போன்ற போஸ்டர்களை ஒட்டியிருக்க வேண்டும்” என்று சுந்தர்ராமன் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், “குறிப்பிட்ட அந்த வங்கி தொடர்பான வழங்கில் சுந்தர்ராமன் நிரபராதி என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அது மட்டுமல்ல இவர் மீது குற்றம் சாட்டிய அந்த வங்கியின் நிர்வாகிகள்தான் குற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டு, அதன்படி வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பொய்யான தகவலைக்கொண்டு, அதிலும் அச்சகத்தின் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இது குறித்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்று  சங்கர்ராமன் தரப்பு கூறுகிறது.

சரத்குமார் தரப்பை அறிய அவரது அலுவலக எண்ணில் தொடர்புகொண்டோம். சரத்துக்கு தகவல் கூறி பிறகு தொடர்பு கொள்வதாக பதில் வந்தது.

நடிகர் சங்க தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை பிரளயங்கள் நடக்குமோ என்ற திகிலில் இருக்கிறது கோலிவுட்.