தேர்தல் தமிழ்: கட்சி என்பதன் இன்னொரு அர்த்தம் தெரியுமா?

கட்டுரையாளர்: என். சொக்கன்

groups-29097_960_720

ரு கட்சி உடைந்துவிட்டது என்று நேற்று ஊரெல்லாம் கலாட்டா.

’கட்சி’ என்ற சொல்லே பெரிய கலாட்டாவுக்குரியதுதான். அது தமிழா, வடமொழியிலிருந்து வந்ததா என்று இன்றுவரை விவாதம் தொடர்கிறது.

’கக்ஷி’ என்பதுதான் இதற்கு இணையான வடமொழிச்சொல், அங்கிருந்துதான் ‘கட்சி’ என்ற சொல் வந்தது என்கிறார்கள். இதன் பொருள், ஒருதரப்பு, அல்லது, ஒருபிரிவு.

உதாரணமாக, வகுப்பில் ஒரு விவாதம் நடைபெறுகிறது, சில மாணவர்கள் இயற்கைதான் சிறந்தது என்று பேசுகிறார்கள், சிலர் செயற்கைதான் சிறந்தது என்று பேசுகிறார்கள். இவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்துள்ளார்கள்: இயற்கைக்கட்சி, செயற்கைக்கட்சி.

அரசியல் கட்சியும் இதேமாதிரிதான். காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி… இப்படி.

கட்சி என்றால் காடு என்றும் பொருள்
கட்சி என்றால் காடு என்றும் பொருள்

இந்தச் சொல் இந்தப் பொருளில் வடமொழியிலிருந்து வந்திருப்பினும், ‘கட்சி’ என்ற சொல் தமிழிலும் உள்ளது, சங்க  இலக்கியங்களிலேயே அதைப் பார்க்கலாம்.

‘கலவ மஞ்ஞை கட்சியின் தளரினும்’ என்பது மலைபடுகடாமில் வருகிறது. எழுதியவர் பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார்.

இதன் பொருள், காட்டிலே தோகை மயில் ஆடுகிறது, அந்த ஆட்டத்தாலும், தோகையின் கனத்தாலும் அது தளர்ந்துநிற்கிறது.

இங்கே கட்சி என்ற சொல்லின் பொருள், காடு!

புறநானூறிலும் ‘கட்சி’ வருகிறது, கபிலர் எழுதிய ஒரு பாடலில்:

‘வெட்சிக் கானத்து வேட்டுவர்ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்ஏறு.’

வெட்சிக்காட்டிலே ஓர் எருது, அதை வேடர்கள் துரத்துகிறார்கள், எங்கே சென்று உயிர்பிழைப்பது என்று தெரியாமல் அது தவிக்கிறது.

இங்கே கட்சி என்ற சொல்லின் பொருள், புகலிடம்!

ஆக, கட்சி என்ற சொல் தமிழில் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு அரசியல் கட்சியைக் குறிப்பிடுகிற சொல்லும் இதுவும் ஒன்றல்ல.

தமிழ்க் கட்சி வேறு (காடு, புகலிடம்), வடமொழிக் கக்ஷி/ கட்சி வேறு (பிரிவு).

அதனால்தான், தமிழகத்தில் உருவான ‘கட்சி’களின் பெயர்களில் ‘கட்சி’ என்ற சொல்லை அதிகம் காண இயலாது. அவர்கள் அதற்கு இணையாகக் கழகம்/ இயக்கம்/ அமைப்பு போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

(தொடரும்)