தேர்தல் தமிழ்: தொண்டர்

என். சொக்கன்

 

 

2

சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ எல்லாருக்கும் தெரியும். அதற்கு இன்னொரு பெயரும் உண்டு, தெரியுமா?

திருத்தொண்டர் புராணம்!

‘தொண்டர்’ என்ற சொல், தொண்டு+அர் என உருவாகிறது, தொண்டுசெய்கிறவர் என்று பொருள். ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

சேக்கிழாரின் நூல் அறுபத்து மூன்று நாயன்மார்கள், அதாவது, சிவனுடைய தொண்டர்களின் கதையை விவரிக்கிறது. ஆகவே, ‘தொண்டர்’ என்ற சொல்லுடன் ‘திரு’ என்ற பெருமைக்குரிய சொல்லைச் சேர்த்து, அதனைத் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கிறார்கள்.

பக்தி இலக்கியங்களில் தொண்டர்களைப் போற்றும் பாடல்கள் ஏராளம். உதாரணமாக, ஔவையார் பாடிய ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!’ என்ற வரிகளைக் குறிப்பிடலாம்.

அது சரி, தொண்டு என்றால் என்ன?

ஒவ்வோராண்டும் +2 தேர்வில் முதல்மதிப்பெண் வாங்கும் மாணவர்கள், ‘நாங்கள் மருத்துவர்களாகி மக்களுக்குச் சேவை செய்வோம்’ என்கிறார்களே, அந்தச் ‘சேவை’யைக் குறிப்பிடும் தூய தமிழ்ச்சொல்தான் தொண்டு.

அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரை, தலைவர், தொண்டர் என்ற வேறுபாடே கிடையாது, அதாவது, சொல்லளவில்.

காரணம், தொண்டர்கள் கட்சிக்குத் தொண்டுசெய்கிறார்கள், தலைவர்கள் மக்களுக்குத் தொண்டுசெய்கிறார்கள் (அல்லது, அப்படிச் சொல்கிறார்கள்). ஆகவே, தலைவரும் தொண்டரே!

‘தொண்டு’க்கு இன்னொரு பொருளும் வழக்கத்தில் உள்ளது, ‘தொண்டுகிழவர்’ அல்லது ‘தொண்டுகிழம்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 90 வயது தாண்டியவர்களை அப்படி அழைப்பார்கள் எனக் கவிஞர் முடியரசன் எழுதுகிறார்.

இதை வைத்து பேராசிரியர் சொ. சிங்காரவேலன் வழங்கிய ஒரு நயமான சொல்விளையாட்டு: ‘தொண்டுகிழவர்’ என்கிற தொடர் அப்பர் சுவாமிகளுக்குதான் மிகவும் பொருந்தும். சிவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டுபுரிந்த கிழவர் அல்லவா அவர்!’

(தொடரும்)