நியூஸ்பாண்டை பார்த்தவுடன் நமக்கு ஆச்சரியம். புதிதாக கண்ணாடி போட்டிருந்தார்.  காதில் செல்போனை பொருத்தி,  யாரிடமோ ரகசியம் பேசியபடி வந்தவர், அப்படியே தனது புஷ்பேக் நாற்காலியில் அமர்ந்தார்.
அவர் பேசி முடியும் வரை காத்திருந்த நாம், “என்ன இது.. புதிதாக கண்ணாடி..” என்றோம்.
“கண்ணில் சிறு பிரச்சினை.. மருத்துவர் செக்கப்.. புதுக்கண்ணாடி..” என்று புன்னகைத்தார்.
“ஓ.. அதனால்தான் இடையில் வரவில்லையா? மன்னித்தோம்.. இனி அடிக்கடி வரவேண்டும்.. செய்திகளை அள்ளித்தர வேண்டும்” என்றோம்.
“ஓகே.. ஓகே..” என்றுதலையாட்டியவர், “ கருணாநிதி மீதான சட்டசபை உரிமை மீறல், அவரது வயது காரணணாக கண்டனத்தோடு முடிந்துவிட்டது பார்த்தீரா..” என்றார்.
“ஆமாம்… ஆமாம்! எல்லாம் அம்மாவின் கருணையோ…” என்றோம் கிண்டலாக.
சிரித்த நியூஸ்பாண்ட், “தேர்தல் நெருங்கும் நேரத்தில், தண்டனை வழங்கினால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார் கருணாநிதி என்பதால், கண்டனத்தோடு விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்” என்றவர், “ இந்த விவகாரத்தில் பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விசயம் இருக்கிறது.. “ என்று பீடிகை போட்டார்.
“சொல்லும்.. சொல்லும்…”
“முந்தைய நாட்களில் சபைக்கு வந்த தே.மு.தி.க.,  கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை வரும் போது சபைக்கு வரவில்லை.. இதற்கு காரணம் என்ன தெரியுமா..?”
“நீர்தான் சொல்ல வேண்டும்!”
”வெளிப்படையாக விஜயகாந்த் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தாலும், தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது என்று தீர்மானித்துவிட்டது தே.மு.தி.க.! இது குறித்த பேச்சுக்களும் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சபைக்கு வந்து, கருணாநிதிக்கு  எதிராக பேச முடியுமா.. ஆகவேதான் நேற்று தே.மு.தி.க.வினர் சபைக்கு வரவில்லையாம்!”
“சரி, கூட்டணி உறுதி என்றால், சபைக்கு வந்து கருணாநிதிக்கு ஆதரவாக பேச முயற்சித்திருக்கலாமே..!:
“தனது நிலைபாட்டை இவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தவில்லை, விஜயகாந்த். ஆகவேதான் ஆதரித்தோ எதிர்த்தோ பேசாமல், சபைக்கு வராமல் இருந்துவிட்டார்!”
“ஓ… !”
“ஆமாம்… நேற்றைய நிகழ்வில் இன்னொரு விசயமும் கவனிக்கத்தக்கது…”
“என்ன அது..?”
“கருணாநிதி மீதான உரிமை மீறல் குறித்து விவாதிக்க அனுமதிக்க வில்லை என்று சி.பி.எம். வெளிநடப்பு செய்தது. ஆனால் சி.பி.ஐ. வெளிநடப்பு செய்யவில்லை..!”
“அட.. ஆமாம்!”
“ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் என்றெல்லாம் தங்களது கட்சிகளை இரு கட்சியினரும் சொல்லிக்கொள்கிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.  தவிர, முந்திய வெளிநடப்புகளில் பேசி முடிவெடுத்து இருவருமாக இணைந்து செயல்பட்டார்கள். ஆனால்  நேற்று நிலைமை தலைகீழ்!”
“ஆச்சரியம்தான்.. இதனால் வெளிப்படும் கருத்து?”
“சி.பிஐயின் பார்வை அ.தி.மு.க. பக்கம் திரும்புகிறதோ என்பதுதான் கருத்து!”
–    நாம் விக்கித்து நிற்க… சொல்லிவிட்டு மாயமாகிவிட்டார்  நியூஸ்பாண்ட்.