நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டில்லி:

2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான  நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார்.

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு

கடந்த தேர்தல் சமயத்தில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர்  மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்த நிலையில், பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு  பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இதுதொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டில்லியில் இன்று தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்திரபாபு நாயுடு சந்திப்பு  பேசினார். அப்போது, அவர்களுடன்  பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே  டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று சரத்பவார், பரூப் அப்துல்லாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டம் குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.

‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது தெலுங்குதேச முன்னணி தலைவர்கள் உடன் உள்ளனர்.