q

சென்னை:

திமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் ஒரே வாரத்தில் விலகியுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடந்தது.

வழக்கத்தைவிட ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தார்கள். ஆகவே அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் இரு பக்கங்களிலும் மதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வைகோ உள்ளிட்டவர்கள் தாயகத்துக்கு வந்தபோது, வெடிகள் வெடிக்கப்பட்டன.

அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதிமுகவில் இருந்து விலகுபவர்கள், “திமுகவுடனான கூட்டணியை வைகோ தவிர்க்கிறார்” என்று புகார் கூறினர். இன்று நடந்த இதற்கான பதிலை வைகோ விரிவாக பேசியதாகவும், ம.தி.மு.க. துவக்கப்பட்ட சூழ்நிலை, இதுவரை ம.தி.மு.க.வுக்கு திமுக இழைத்த துரோகங்கள் என்று நீண்ட நேரம் வைகோ பேசினார். என்று கூட்டத்தில்கலந்துகொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பிறகு “யாரேனும் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. மனம் திறந்து சொல்லுங்கள்” என்று வைகோ கேட்க, அனைவரும் “இல்லை..” என்று குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

அக் கூட்டம் முடிந்த வைகோ, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவப்போது அவர் பேசியதாவது:

“எங்கள் இயக்கத்தில் இருந்து சமீபத்தில் சில நிர்வாகிகள் விலகிச் சென்ற விழுப்புரம், சேலம், காஞ்சி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வந்தார்கள். அவர்களை சந்தித்தப் பிறகுதான் உயர் நிலைக் குழு கூட்டத்தை ஆரம்பித்தோம்.

இதற்கு முன்பாக உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கூட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளைத்தான் மாநாட்டில் என்னுடைய உரையில் தெரிவித்தேன். அதாவது, தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைப்பதில்லை. மக்கள் நலக் கூட்டியக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றேன்.

அதன் பின்னர் மதிமுகவின் காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு அந்த முடிவை ஏற்க இயலாது என்று சில காரணங்களை சொல்லி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தார்.

மதிமுக மாவட்ட செயலாளர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுவாவது கட்சிகளுக்குள்ளான பிரச்சினை.

ஆனால், தமிழகத்துக்கு தொடர்ந்து திமுக தீமை செய்து வருகிறது. முல்லைப்பெரியாறு, ஈழத்தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக, தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது.

ஊழலாலும், குடும்ப அரசியலாலும் திமுக, தமிழகத்தை பாழாக்கிவிட்டது.

திமுகவுக்கு எந்த விதத்திலும் குறைவின்றி ஊழலில் திளைக்கிறது அதிமுக. அக் கட்சியின் தலைவியே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பிறகு மேல் முறையீட்டில் வெளியே வந்திருக்கிறார்.

இந்த இரு கட்சியின் தலைவர்களின் மோசமான செயல்பாடுகளால் ஒட்டுமொத்தமாக திராவிட ஆட்சி மோசம் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த தவறான வாதத்தை எதிர்கொள்ள, மதிமுக புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே அதிமுக திமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது.

திமுகவுடன் கூட்டணி என்று எப்போதுமே நான் சொல்லவில்லை. கருணாநிதி தானாக என்னை போனில் அழைத்து, தனது பேரன் திருமணத்துக்கு பத்திரிகை வைக்க ஸ்டாலின் வருவார் என்றார். நாகரீகம் கருதி வரச் சொன்னேன். அதே போல நாகரீகம் கருதி திருமணத்துக்குச் சென்று வந்தேன். மற்றபடி கூட்டணி என்று எப்போதும் சொல்லவில்லை.”

இவ்வாறு வைகோ பேசினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் மிகச் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். “பாராளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலின்போது விலகி நிற்கிறது மதிமுக என்று விமர்சனம் இருக்கிறதே” என்ற கேள்விக்கு, அப்படி இல்லை. என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

ஏற்கெனவே திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் இருந்த பாஜக கூட்டணிக்குத்தான் திமுக வந்தது. அடுத்த தேர்தலில் கூட்டணி ஏற்பட்டதற்குக் காரணம் அப்போது நான் சிறையில் இருந்தேன். அந்த நேரத்தில் அவைத்தலைவராக இருந்த எல்.கணேசன் பதவி ஆசை காரணமாக திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். என்னால் தடுக்க இயலாமல் போய்விட்டது” என்றார்.

பிறகு, கட்சியைவிட்டு விலகியவர்கள் பலவீனமானவர்கள்.. எதற்கோ ஆசைப்பட்டு வேறு கட்சியை நாடியிருக்கிறார்கள் என்றார்.

அதற்கு, “ முக்கிய பொறுப்புகளில் இருவப்பவர்கள் தொடர்ந்து விலகுவது நடக்கிறது.  அப்படி பலவீனமானவர்களுக்கு ஏன் பொறுப்பு கொடுக்கிறீர்கள்?” என்று ungalpathrikai.com சார்பில் கேட்கப்பட்டபோது, “ பிறர் மனதிற்குள் இருப்பதை அறிய நான் என்ன கடவுளா” என்று ஆவேசப்பட்ட வைகோ, “இயேசுவே தன் சீடர்களில் யூதாஸ் என்ற துரோகி இருப்பான் என்பதை அறியவில்லை. நான் சாதாரண மனிதன்தானே.. எனக்கு எப்படித் தெரியும்” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

அத்தோடு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

இன்று காலை தாயகம் வந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கும் அந்தத் தொண்டரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதாகவும் தெரிவித்தார்.