நிதிஷ்-பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு: எம்.பி. ராஜினாமா

டில்லி,

டந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, ராஷ்டிரிய ஜனதாதளத்தை விட்டு விலகி பாஜவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியை அமைத்தது.

இந்நிலையில், நிதிஷ்குமாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக  ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வீரேந்திர குமார் கூறி உள்ளார்.

இதுகுறித்த கடிதத்தை துணைஜனதாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான  வெங்கையா நாயுடுவுக்கு  அனுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது.

குஜராத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி விமர்சனம் செய்த பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமார், தனது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர்  கூறியதாவது:

நான் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யாக இருந்து வருகிறேன். பீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி, சங் பரிவார் அமைப்பான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை என்னால் ஏற்க முடியவில்லை.

அதன் காரணமாக நான்,  எனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.