நிபுணர்களின் எச்சரிக்கை: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்களை ரத்து செய்தது மலேசியா

சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன திட்டங்களை மலேசியா ரத்து செய்துள்ளது. மலேசியாவின் இந்த முடிவினால் சீனா பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்வுகள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுடன் சாலை, ரயில் மற்றும் கடல்வழி போக்குவரத்தை ஏற்படுத்தும் ‘ ஒரே மண்டலம், ஒரே பாதை ‘ என்ற கனவு திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக பலுசிஸ்தானில் உள்ள குவாதரில் பிரமாண்டமான துறைமுகத்தை சீனா கட்டியுள்ளது. குவாதரில் இருந்து சீனாவிற்கு நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி வழியாக செல்வதால் இந்தியா கடுமையான ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

malasiya

சீனாவுடன் இணைந்து ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்திற்காக ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பீட்டிலான ரயில் மற்றும் எண்ணெய் குழாய்கள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த மலேசியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் முன்னிலையில் கையெழுத்தானது. இதையடுத்து கடந்த மாதம் மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் மகாதீர் முகமது சீனாவிற்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் சீனாவுடனான ரயில் மற்றும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டங்களை ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து முகமதி கூறுகையில், “ சீனாவுடன் இணைந்து ஒரே மண்டலம், ஒரே பாதை என்ற திட்டத்தின் மூலம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்தை இணைக்கும் ரயில் பாதை மற்றும் 2 எண்ணெய் குழாய்கள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது இருக்கும் சூழலில் இத்திட்டம் மலேசியாவுக்கு தேவையில்லை “ என்றார்.

மேலும், சீன நிதியுதவியுடன் இந்த திட்டங்களைச் செயல்படுத்தினால் மலேசியாவுக்கு பெரும் கடன் சுமை நேரிடும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே ரயில் பாதை, எண்ணெய் குழாய் திட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என மகாதீர் முகமது குறிப்பிட்டார்.

மலேசிய பிரதமரின் இந்த முடிவால் சீனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சீனா இணைத்துள்ளது. இந்த நாடுகளும் பெரும் கடன் சுமையில் சிக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.