நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை கோரிய மனு தள்ளுபடி

டில்லி:

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, முகேஷ் (31), பவன் குப்தா (24), வினய் ஷர்மா (25), அக்‌ஷய் குமார் சிங் (33) மற்றும் இளம் குற்றவாளி ஒருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு, 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தன. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நடந்த விசாரணையில் இந்த தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த நிலையில், நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோரி வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவாஸ்தவா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் தீபக் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘என்ன மாதிரியான கோரிக்கையை நீங்கள் வைக்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றத்தினை ஒரு நகைச்சுவை ஆக்குகிறீர்கள்’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி