Random image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

raja_

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமை ஏற்றார். உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த பகுதியில் ஊர்வலம் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் வீடியோவாக பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது போலீசாரை அவதூறாக பேசியது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா 4 வாரத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு புகாரை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.