நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரிப்பு
நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரிப்பு
உலகத்தின் ஏழை நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோய் தொடர்பான மிகப்பெரிய ஆய்வினை உலக சுகாதர நிறுவனம் அண்மையில் நடத்தியது. அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறியதாவது:-
உலகம் முழுவதும் வயது அதிகரிக்கும் மக்களும், உடல் பருமன் அதிகரிப்பு கொண்டவர்களும் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே வருகின்றனர். இதனால் அவர்கள் எளிதில் நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதனை உலகளாவிய விஷயமாக இது பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் இந்நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் அதேவேளை பார்வையிழப்பு, சிறுநீரகப்பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம்,மூட்டுவலி ஆகியவற்றை தரக்கூடியதாக உள்ளது. இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு உடல்பருமன்தான் மிக முக்கிய காரணம். உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சிகளில் பலரும் தோற்றுப்போய்விடுகின்றனர்.உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 200 நாடுகளில் 442 மில்லியன் பேர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகி உள்ளனர்.
1980 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது. சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் மெக்ஸிக்கோ உட்பட பல வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில்தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஆண்,பெண் என இருவரிடையே இந்நோயின் தாக்கம் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் ஆண்கள் மத்தியில் சுமார் 5 முதல் 6 சதவீதம் என்ற எண்ணிக்கையில் இந்நோய் காணப்படுகிறது.உலகத்தின் வேறு எந்த நாடுகளிலும் நீரிழிவு நோயின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. பசிபிக் தீவு நாடுகளில்தான் இந்நோயின் தாக்குதல் விகிதம் மிகவும் அதிக நிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளான எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் உள்ளன.
சீனா, இந்தியா,அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஐந்து நாடுகளில்தான் நடுத்தர வயதுக்காரர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுடன் வசித்து வருவதாக 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது . 1980 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கிடையேயான காலகட்டத்தில் சீனா மற்றும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.