“சிம்புவை மட்டும் குற்றம் சாட்டுகிறார்களே.. ஆன்மிக நூல்களில் ஆபாசம் இல்லையா.” என்று சமூகவலைதளங்களில் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர் சிம்பு ஆதராவளர்கள்.  இது இந்துத்துவ அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜூன் சம்பத்
அர்ஜூன் சம்பத்

சமீபத்தில் நடிகர் சிம்பு பாடிய ஆபாச பீப் பாடல் மக்களிடையே பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. சில அமைப்பினர் சிம்பு வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதோடு காவல்துறையில் புகாரும் செய்யப்பட்டு வரும் 19ம் தேதி சிம்பு, ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “நான் பாடியது என் விருப்பம்.. அதில் என்ன தவறு” என்கிறார் சிம்பு. அவரது கருத்தை பிரதிபலிக்கும் விதமாக, அவரது ரசிகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர்களில் சிலர், “ஆன்மிக நூல்களில் ஆபாசம் இல்லையா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பரப்பி வருகிறார்கள்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

“ ஆண்டாள் என்ற பக்தை, இறைவனை நினைத்து பாடியதாக சொல்லப்படுவது திருப்பாவை. அதிலேயே ஆபாச வரிகள் உள்ளன.

அதில் 19 ஆவது பாடல் இது:

“குத்துவிளக் கெரியக்
கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த
மலர்மார்பா வாய்திறவாய்” என்று அந்த பாடல் வரிகள் இருக்கின்றன.

அதாவது, மனைவியின் மார்பின் மீது இறைவன் படுத்திருக்கிறாராம். இதை பக்தை பாடுகிறார்.

இறைவன் – பக்தை உறவு என்பது, தந்தைக்கும் மகளுக்குமான உறவு என்பார்கள். தாயின் மார்பு மீது தந்தை படுத்திருப்பதை மகள் பாடலாமா.. இது ஆபாசம் இல்லையா?

தவிர, பாடிய பக்தையின் விரக தாபத்தைத்தானே இந்த வரிகள் எடுத்துக்காட்டுகின்றன?

அது மட்டுமல்ல.. இந்த திருப்பாவையில், “அல்குல்” என்ற வார்த்தை வருகிறது. அது பெண்ணுறுப்பை குறிக்கும் வார்த்தைதானே..

இது ஆபாசம் இல்லையா?

இந்த பாடல்களை கோயில் கோயிலாக வெளிப்படையாக பாடுகிறார்களே.. புத்தகமாக அச்சடித்து விற்கிறார்களே.. இதெல்லாம் ஆபாசம் இல்லையா?

சிம்புவோ, தன் விருப்பத்துக்காக சில பாடல்களை பாடி வைத்திருந்தார். அது எப்படியோ வெளியாகிவிட்டது. அவர் மட்டும் குற்றவாளியா?”

  • என்று ஆன்மிகவாதிகளையும், கடவுள் பக்தி உள்ளோரையும் நோக்கி கேள்வி எழுப்புகிறது சிம்பு ரசிகர்களின் அந்த கட்டுரை.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் கேட்டோம்.

அவர், “திருப்பாவையில் மட்டுமல்ல கம்பராயமணம் உட்பட பல புராணங்களில் இதிகாசங்களில் முலை, அல்குல் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரரும் தனது பாடலில் பயன்படுத்தி இருக்கிறார். கோயில் சிற்பங்களில் ஆண் பெண் உறவு இருக்கிறது. அதெல்லாம் பக்தியின் வெளிப்பாடு.. அவற்றையும் இந்த தறுதலை சிம்பு பாடியதையும் ஒப்பிடுவதே தவறு.

அந்த பக்தி பாடல்கள், முதாயத்தை மேம்படுத்தியது. இவன் பாடியது சமுதாயத்தை பண்பாட்டையும் சீரழிக்கிறது.

பாரதியாரும் காதல் பாடல்கள் எழுதியிருக்கிறார்.. பெண்களை வர்ணித்திருக்கிறார்.. அது வாசம் என்றால், இந்த சிம்பு துர்நாற்றம்.

சிம்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும். கலையுலகில் இயங்க தடை விதிக்க வேண்டும்” என்று ஆவேசமாகச் சொல்லி முடித்தார் அர்ஜூன் சம்பத்.

  • விச்சு