பசும்பாலில் தங்கம் இருக்கிறது, அதனால் அது மஞ்சளாக இருக்கிறது! சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

புர்த்வான்: பசும்பாலில் தங்கம் இருப்பதால் அதன் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான விஷயத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது என்று பேசி வம்பை விலைக்கு வாங்கியவர்.

இந்த முறையும் சர்ச்சை கருத்துகளை பேசி, பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். கொல்கத்தாவில் இருந்து புர்த்வான் பகுதியில் கூட்டத்தில் அவர் பேசி இருப்பதாவது: அதிகம் படித்தவர்கள் என்ற ஒரு வகையினர், சாலையோர கடைகளில் மாட்டிறைச்சி உண்கின்றனர்.

ஏன் மாட்டிறைச்சி சாப்பிடுகிறீர்கள்? நாய்க்கறிகூட சாப்பிடலாமே! அதுவும் உடலுக்கு நல்லதுதான். நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதை உங்களின் வீட்டுக்குள் செய்யுங்கள். ஏன் ரோட்டில் சாப்பிடுகிறீர்கள்?

பசுமாடு எங்களுக்கு தெய்வம். அதனை அவமதிப்பதை, கொல்வதை  ஏற்க முடியாது. பசும்பாலில் தங்கம் இருக்கிறது. அதனாலேயே அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.

பசுமாட்டின் காம்பில் சூரியஒளி படும்போது பாலில் தங்கம் உருவாகிறது. அந்த பாலை உண்பதால் தான் வாழ்கிறோம். பசுமாடு எங்களின் தான். எனவே, யாராவது எனது தாயிடம் தவறாக நடந்து கொண்டால், அவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்போம்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுபவை பசுக்கள் அல்ல. மாறாக அவை அனைத்தும் மிருகங்கள் என்று பேசியிருக்கிறார்.