பஞ்சாப்: மாணவர்கள் போராட்டத்தில் டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பரித்காட்:

பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டத்தில் டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் அருகே ஜெய்து என்ற பகுதியில் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதாக கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி. பல் ஜிந்தர் சாந்து (வயது 50) அங்கு விரைந்து சென்று மாணவர்களை சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் சிலர் டிஎஸ்பி.யின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த டிஎஸ்பி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக்கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார். இதை கண்டு அதிர்சியடைந்த சக போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு மொத்தமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலை தளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.